ஊரடங்கை அரசே மீறச் சொல்லலாமா? கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை திருப்தியாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும், தமிழகத்திலும் மிதவேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அது இன்றோடு நான்காவது நாளை எட்டியுள்ளது. இந்த 4 நாட்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்களைக் கூட காவல் துறையினர் தாக்குவதால், அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். 21 நாட்கள் ஊரடங்கை சமாளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு பொருளாதாரச் சலுகைகளையும், நிவாரண உதவிகளையும் அளித்துள்ளன.

இந்த நிலையில் சிபிஎம் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை, மின்னம்பலம் சார்பாக தொடர்புகொண்டு பேசினோம். கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும், அதனால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்தும் விரிவாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நாட்டு நலன் கருதி தமிழகம் உள்பட இந்திய மக்கள் அனைவரும் அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பேச்சை துவங்கியவர், “கடந்த டிசம்பர் மாதமே கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்றை அந்த நாட்டில் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால், இத்தாலி, ஈரான் உள்ளிட்ட மற்ற நாடுகள் கொரோனாவை எதிர்த்து போராடி வருகின்றன.

சீனாவின் உகான் நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதும் மக்கள் மீது அக்கறை கொண்ட அந்நாட்டு அரசு, உடனடியாக அந்த நகரத்திற்கு சீல் வைத்தது. மூன்று மாதங்களுக்கு மக்கள் வெளியே வரக்கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான உத்தரவுகளை பிறப்பித்ததோடு, அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுத்தார்கள். மூன்று மாதத்திற்குத் தேவையான பொருட்களை வீடு வீடாகச் சென்று வழங்கியது சீனா அரசு. தற்போது அந்நாடு கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக மகிழ்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “கொரோனா வரும் முன்போ, வந்த பின்போ மத்திய, மாநில அரசுகள் எந்தவித உயிரோட்டமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மோடி தலைமையிலான அரசு சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆரை அமல்படுத்துவதில் அக்கறை காட்டியதே தவிர கொரோனா வைரஸ் பாதிப்பைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை” என்று குற்றம்சாட்டியவரிடம் நாம் கேள்விகளை அடுக்கினோம்…

**வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை கண்காணித்தது உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதே?**

கொரோனா வைரஸ் ஆபத்துக்களைப் பற்றி டிசம்பர் மாதமே எச்சரித்தும், அப்போதெல்லாம் மெத்தனம் காட்டியது மத்திய அரசு. ஜனவரி மாதம் முதலே வெளிநாட்டிலிருந்து வருபவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி, மூன்று மாதங்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தால், இப்போது நமக்கு இவ்வளவு பெரிய போராட்டம் தேவையிருந்திருக்காது.

அதுபோலவே, தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. கடந்த மூன்று மாதகால அவகாசத்தில் மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்திருக்கலாம். வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் வந்தவர்களை கண்காணித்திருக்கலாம், ஜனவரி மாதம் முதல் காய்ச்சல்,சளி,இருமல் தொந்தரவு இருந்தவர்களின் விபரங்களை சேகரித்து வைத்திருக்கலாம். தற்போதுத் தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பது போல மார்ச் 24ஆம் தேதி திடீரென ஊரடங்கு உத்தரவைப் போட்டு மக்களை வீட்டுக்குள் அடைத்துவிட்டது.

**21 நாட்கள் ஊரடங்கு என்பது மக்கள் நலன் கருதிதானே?**

நானும் இல்லை என்று சொல்லவில்லை. நம் நாட்டு மக்கள் இதற்கு முன்பு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த வழக்கம் இல்லாதவர்கள். இதுவே முதல் முறை என்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சென்னையில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகள் மிகக்குறுகிய அளவைக் கொண்டவை. அதில்தான் 5 முதல் 10 பேர் வரை வசிக்கிறார்கள். மூன்று வார ஊரடங்கு உத்தரவு, மூன்று மாதங்களாக நீட்டிக்கப்பட்டால் மக்கள் மனநோயாளிகளாக மாறிவிடுவார்கள். கொரோனா வைரஸில் இறப்பதை விட பசி, பட்டினி வறுமையில் இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர் வந்தபோதோ, இரண்டாம் உலகப்போர் நடந்தபோதும் கூட இப்படி நெருக்கடியான சூழல்கள் ஏற்படவில்லை. இப்போது கொரோனா யாருக்கு இருக்கும் என்ற அச்சத்திலேயே நாட்களை கடத்திவருகிறார்கள். மூன்று மாதங்கள் வேலைக்குப் போகாமல் கூட மேல்தட்டில் உள்ள மக்கள் வாழ முடியும். மக்கள் தொகையில் சுமார் 70 சதவிகிதம் உள்ள விவசாயிகள், விவசாயக் கூலிகள், தொழிலாளர்கள், ஆட்டோ, கார் ஓட்டுநர்களின் குடும்பங்களின் நிலை என்னவாகும். மீனவர்களின் நிலை என்ன? அவர்கள் என்ன செய்வார்கள்? இவர்கள் அனைவரின் வாழ்வாதாரத்திற்கான மாற்று வழியை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

**இதனால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லுங்கள்?**

இது விவசாயிகள் அறுவடை செய்து முடித்துவிட்டு மீண்டும் பயிரிடுவதற்கான காலம். ஊரடங்கின் காரணமாக ஆட்கள் வேலைக்குச் செல்லாததால் கரூர், தேனி மாவட்டங்களில் வாழை கருகி உதிர்ந்துகொட்டுகிறது. வெயிலுக்கு இதமான தர்ப்பூசணி பழங்கள் பறிக்க ஆள் இல்லாததால் அழுகிப்போய்விட்டன. நிலக்கடலையை பறிக்க முடியவில்லை. கரும்பு காய்ந்துவிட்டது. நெல் பயிரிட முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். தேயிலை பறிக்க முடியாமல் காய்ந்து கொட்டுகிறது. விவசாயம் இதனால் முற்றிலும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.

**மத்திய, மாநில அரசுகள்தான் இலவச ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அறிவித்துள்ளதே?**

மத்திய அரசு கொடுக்கும் 5கிலோ அரிசியும், மாநில அரசு கொடுக்கும் ரூ.1,000 பணமும் 21 நாட்களுக்கு ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருக்குமா? ஊரடங்கு 3 மாதங்களுக்கு நீடித்தால் இந்த அரசுகள் என்ன செய்யும்?

மாநில அரசு அறிவித்த 1,000 ரூபாயையும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களையும் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டும். அப்படியென்றால் ஊரடங்கு உத்தரவைப் போட்டவர்களே, அதனை மீறும் வகையில் மக்களை வரிசையில் நிற்க ஊக்குவிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் மக்களுக்குத் தேவையான பொருட்களை வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. சீனாவை விட மக்கள் தொகை குறைவான இந்தியாவில் பணமும் பொருளும் வீடு வீடாக விநியோகம் செய்யமுடியாதா? ஒரு ரேஷன் கடைக்கு 500 முதல் 1,500 ரேஷன் கார்டுகள் வரை உள்ளன. ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி ஐந்து நாட்களில் வீடு வீடாக விநியோகித்து விடலாம்.

**கொரோனோவுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை எப்படி உள்ளது?**

“தமிழக அரசு இன்னும் மெத்தனமாகத்தான் இருந்துவருகிறது. மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பெருந்தொற்று பரவினால் தமிழகம் தாங்காது. சுகாதாரத் துறையில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மக்கள் வெளியில் வராமலிருக்க அவர்களுக்கான அடிப்படைப் பொருட்கள் விரைந்து கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்தவர், கொரோனா வைரஸை தடுத்து மக்களை பாதுகாக்கும் மருத்துவத் துறையினருக்கும், காவல்துறைக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து விடைபெற்றுக்கொண்டார்.

**எம்.பி.காசி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel