ஸ்ரீராம் சர்மா
மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
என்றாலே என் நினைவுக்கு வருவது தலையில்லா முண்டம்தான். அன்றைய சென்னையில் அப்படியானதொரு பீதி கிளம்பியிருந்தது.
ஊருக்குள் தலையில்லா முண்டம் ஒன்று சுற்றிக்கொண்டிருப்பதாகவும் அதன் நோக்கம் (?) என்னவென்று தெரியவில்லை என்றும் முரட்டு தீயாய் பரவிக்கொண்டே இருந்தது அந்தப் பீதி.
போதாக்குறைக்கு தந்தி பேப்பரும் அதை முதல் பக்கத்தில் போட்டுத் தொலைத்துவிட, தனக்குத் தானே ஊரடங்கிக்கொண்டது தலைநகரம்.
அதிகாலையில் ஜெமினி மேம்பாலத்தில் இறங்கிப்போனது – லைட் அவுஸ் மேலே தொங்கிக்கொண்டிருந்தது – தண்டையார்பேட்டையில் தெருவோர ரிக்ஷாவில் தூங்கிக்கொண்டிருந்தது – கூடை சோறு விற்கும் ஆயாவிடம் இட்லி கேட்டது – அமாவாசைக்குத் தலைச்சனைக் கேட்க வந்திருக்குது… இன்னும் என்னென்னவோ தகவல்கள் தலையில்லா முண்டத்துக்குள் செருகப்பட்டுச் சுற்றலில் விடப்பட்டன.
வீட்டு வேலை செய்யும் ஆயாக்களின் கற்பனைத் திறனில் சிக்கியபின் வீட்டுக்கு வீடு பூதாகரமாக்கிக் கடத்தப்பட்டது ‘அது’! அவர்கள்தான் அன்றைய சோஷியல் மீடியாக்கள். ஆளாளுக்கு ஒன்றைச் சொல்வார்கள். அத்தனையையும் நம்ப தயாராக இருந்தார்கள் மக்கள்.
“யெம்மாடீ…. எப்படீன்னா எங்க ஐயுரு வூட்டைக் காப்பாத்துடீம்மான்னு அந்த முண்டகண்ணீம்மாவாண்ட கேட்டுக்குனுத்தான் வந்தேன்…” என்றபடியே புழக்கடைக்குள் பைய நுழையும் வேலைக்கார ஆயாக்களை திகிலடைந்த முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள் அக்ரகாரத்து மாமிகள்.
இரவு சாப்பாட்டை முடித்தபின், வெற்று உடம்போடு தெருவில் இறங்கி வேட்டியை அள்ளித் தொடைகளுக்குள் செருகிக்கொண்டு கிரிக்கெட் அரட்டை அடிக்கும் அல்லிக்கேணி மாமாக்களையும் காணவில்லை. ஆபீஸ் பைல்களைக் கொத்தாக அள்ளிக்கொண்டு வந்து ‘அக்கவுன்ட்ஸ் முடிக்கிறேன் பேர்வழி’ என்று நைசாக வீட்டுக்குள் முடங்கிக்கொண்டார்கள்.
அன்றாட வாழ்க்கையின் அழகு கெட்டுப் போயிருந்தது.
ஐஸ் அவுஸ் பஸ் டெர்மினஸில் வந்து இறங்கும் கல்லூரிப் பெண்கள் வழக்கமாகப் பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கே இருபது நிமிடங்கள் நடந்து போவார்கள். அவ்வளவு ஒயில் – அலப்பறை !
மொத்தமும் கப்சிப்பென்று காணாமல்போக, முதலைக்குப் பயந்து ஆற்றைக் கடக்கும் ‘வயில்ட் பீஸ்ட்’களைப் போல ஒருவர் மேல் ஒருவர் மோதியபடி வீடு போய் சேர்ந்தால் போதுமென ஓடிக்கொண்டிருந்தார்கள்.
பயந்த சுபாவம்கொண்ட திருவல்லிக்கேணி மக்கள் இயல்பு தப்பியிருந்தார்கள். தனியாக நடந்துப்போவதை நாசூக்காகத் தவிர்த்தார்கள். எந்த சத்தம் கேட்டாலும் எல்லோரும் திரும்பினார்கள். அநாவசியமாக ‘பாம், பாம்…’ ஹார்ன் அடிக்க வேண்டாமே என்று பஸ் டிரைவர்களிடம் பர்சனலாக வேண்டிக் கொண்டார்கள்.
அம்மாக்கள், இருட்டுவதற்குள் கங்கணா மண்டபக் காய்கறி ஷாப்பிங்குகளை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்குள் அடைந்துகொண்டார்கள். ஸ்லோக புஸ்தகமும் கையுமாகவே இருந்தார்கள். காற்றில் அமானுஷ்யம் கலந்திருந்தது.
ராமசாமி சலூன் கடை! சமனற்றத் தரையில் ‘முடுக், முடுக்’ எனச் சத்தமெழுப்பும் அந்த மர பெஞ்ச் எந்த நேரமும் நிரம்பி இருந்தது. வழக்கமான அரசியல் வம்பளப்புகள் நிறுத்தப்பட்டு தலையில்லா முண்டத்தை அட்மிட் செய்திருந்தார்கள்.
“அது பாருங்க நாயுடு… உலகம் அழியப் போற காலம் வந்துடிச்சின்னா… இப்படித்தான், தலையில்லாத முண்டம் மாதிரி ஏடாகூடமா நடக்கும்னு…”
“நடக்கும்னு…?”
“எல்லா மத புஸ்தகத்துலயும் சொல்லியிருக்குதாமே.…!?“
“அட, சும்மா இருங்க செட்டியார்… இதப் போயி பெரியார்கிட்ட சொன்னா தடியால அடிப்பாரு…”
“அவரைதான் அனுப்பிச்சிட்டீங்களே? அது சரி, சொல்லும்போது உங்க கை ஏன் ஒதறுது…?”
“வார்னிஷ் கைங்க… அப்படித்தாங்க உதறும்… சாயந்தரம் ஸ்டடி ஆயிக்கும்… சும்மா கேக்கணும்னு கேக்காதீங்க செட்டியார்…”
“சரி, சரி…மார்கழி வருது. கம்பளி ஒண்ணு வாங்கித் தாரேன். முண்டத்த எங்கனா பாத்தா குடுங்க… பாவம், ‘அது’க்குக் குளிரப் போவுது…”
“ஏன், வாங்க தெரிஞ்சவங்களுக்கு குடுக்கத் தெரியாதா? நான் ஏங்க நடு ராத்திரி சுடுகாட்டுக்குப் போவணும்…?”
மொத்த பெஞ்ச்சும் குலுங்கி சிரிக்கும். அன்று, பெரிசுகள் சாதி சொல்லி பேசிக் கொண்டாலும் அதில் வன்மம் இருக்காது. கலகலப்புதான் மிஞ்சும்.
என்னதான் அவர்கள் கலாயலாகப் பேசிக்கொண்டாலும் அவர்களுக்குள்ளும் உதறல் இருக்கத்தான் செய்தது.
எங்கள் வீடு கடற்கரைக்குச் செல்லும் சாலையான பெசன்ட் ரோட்டில் இருந்தது. பக்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் தெரு ஓர் அடைந்த வீதி (Blind End Street) என்பதால் அதற்குள் சிறுவர்கள் கூடி ‘ஐஸ் பாய்’ ஆடுவது வழக்கம். அந்தக் குதூகலமும் பாழாய்ப் போனது.
பிறகென்ன? ஐஸ் பாய் விளையாட்டின் தொடக்கத்தில் சுவரில் முகத்தை வைத்து கைகளால் அழுந்த மூடிக்கொண்டு இருபது வரை எண்ண வேண்டும் என்பது ஆட்ட விதி. எல்லோரும் ஓடி ஒளிந்துகொள்ள, ஆளரவமற்ற அந்தத் தெருவில், ‘பதினைந்து, பதினாறு…’ என எண்ணிக் கொண்டிருப்பவன் தோளை தலையில்லா முண்டம் வந்து தொட்டுவிட்டால்?
ஐயையோ, ஓடும் விளையாட்டே வேணாம். கும்பலா உட்கார்ந்து கேரம் – செஸ் என ஆடலாமா என யோசித்துக் கொண்டிருக்கும்போதே அம்மாக்கள் பேசி வைத்துக்கொண்டு சிறுவர்களுக்குப் போட்டார்கள் 144.
அப்போதெல்லாம் கூட்டுக் குடும்பம் என்பதால் உள்ளுக்குள்ளேயே சத்தம் போடாமல் புக் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தோம். அந்த ஏரியாவில், சுற்றி வர எங்கள் வீட்டில் மட்டும்தான் தொலைபேசி இருந்தது. அது, ஓயாமல் அடிக்கத் தொடங்கியிருந்தது.
தூரத்து ஆபீஸ்களில் வேலை செய்பவர்கள் – வேலை விஷயமாக வெளியூர் சென்றவர்கள் எல்லோரும் பாவம், மாற்றி மாற்றி போன் போடுவார்கள். தங்கள் குடும்பம் எப்படி இருக்கிறதோ என்னும் கவலை அவர்களுக்கு… தலையில்லா முண்டத்தின் ‘அப்டேட்டை’த் தயங்கித் தயங்கிக் கேட்பார்கள்.
உள் அறையில் நிசப்தமான சூழலில் ஓவியம் வரையும் பழக்கம் உள்ள அப்பாவுக்கு அந்த ஓயாத போன் அழைப்புகள் பெருந்தொல்லையாகிப் போனது. அவரது உலகமே வேறு. அவருக்கு இதைப் பற்றி எல்லாம் சுத்தமாக அக்கறையும் இல்லை. கவலையும் இல்லை.
கடுப்பானதொரு நாளில், “என்ன எழவாப் போச்சுடீ இது… அந்த முண்டத்த செருப்பால அடி!” என அப்பா சத்தம் போட தொடங்க… அவரை மெல்ல சமாதானப்படுத்திய அம்மா, வீட்டில் வேலைக்கு இருந்த பால்காரம்மா மகள் ருக்குவையும் – வீட்டோடு தங்கிவிட்ட கோவிந்தம்மா கிழவியையும் அந்தக் கறுத்த போனுக்கு அருகில் கருத்தாய் உட்கார்ந்து அமுக்கச் சொல்லி விட்டாள்!
அவர்கள் ஒவ்வொரு போன் காலையும் முதல் ரிங்குக்கே சடாரென கழுத்தைப் பிடித்து தூக்கி விடுவார்கள். மெல்லிய குரலில் புதுப்புதுக் கதைகளைச் சொல்லி எதிர்முனைக்கு நம்பிக்கையும் திகிலையும் மாறி மாறி ஊட்டிக்கொண்டிருந்தார்கள்.
அதில் ருக்குவின் பர்ஃபார்மன்ஸ்தான் டாப். எங்களைவிட நாலைந்து வயசுதான் அதிகம் அவளுக்கு. ஆனாலும், அம்மாவின் செல்லத்தால் எங்கள் மீது அவளுக்கு அதிகாரம் இருந்தது.
பதின்மத்தின் மதர்ப்பத்தில் இருந்த ருக்கு போன் பேசும் தருணங்களில் தன்னை 16 வயதினிலே ஸ்ரீதேவியாகவே வரித்துக்கொள்வாள். விழிகளை அகல விரித்து ஹஸ்கி வாய்ஸில் பேசுவாள். புருவங்களைச் சுருக்கியபடி முகத்தில் நவரஸங்களையும் ட்ரை பண்ணுவாள். எதிர்முனையைப் பேசவிட்டு அதை ஸ்டைலாகக் கூர்ந்து கேட்பாள். மீண்டும், நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு உதட்டைப் பிதுக்கியபடி ஏதோ சொல்வாள்.
முடிவில், “ஒண்ணும் கவலைப்படாதீங்க மாமா… எல்லாரும் மொட்டை மாடியில் ஒண்ணு சேர்ந்து, கவசம் சொல்றதா அம்மா முடிவு பண்ணியிருக்காங்க… முருகன் மேல பாரத்தைப் போட்டு தைரியமா இருங்க…” பெரிய மனுஷ தோரணையோடு போனை வைக்கும் ருக்குவை நாங்கள் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்போம்.
என்ன நினைப்பாளோ, வாயைக் குவித்து இட வலமாக ஆட்டி ஒழுங்கு காட்டியபடி வெடுக்கென திரும்பி அடுத்த போனுக்குக் காத்திருப்பாள்.
இப்படியாக, ஆளாளுக்கு ஒரு பிடி பீதி அள்ளிப் போட, அன்றைய சென்னை அறிவிக்கப்படாத ஊரடங்கோடு அச்சத்தில் அமிழ்ந்து இருந்தது. அந்த அச்சம் ஐஸ் அவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் கோழி காவு கொடுத்து காளி பூசை போடும் அளவுக்குப் போனது.
ஊரையே ஆட்டிவைத்துக்கொண்டிருந்த அந்தத் தலையில்லா முண்டக் கூத்து ஒரு நாள் பொக்கெனத் திரை கிழிந்து போனது.
விஷயம் இதுதான். வட நாட்டில் இருந்து வந்த திருடர்கள், உள்ளூர் திருடர்கள் சிலரோடு கைகோத்துக் கொண்டு புதுத்திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறார்கள்.
அதன்படி, ரோட்டில் இருக்கும் சைஃபன் இரும்பு மூடிகள், கார்ப்பரேஷன் கக்கூஸ் கதவுகள், ஒதுக்குப் புறமாக இருக்கும் அடிகுழாய்கள் போன்றவற்றை அபேஸ் பண்ணத் திட்டமிட்டவர்கள். தங்கள் திருட்டுக்கு வசதியாக, ரோட்டில் ஜன நடமாட்டம் இல்லாமல் இருந்தால் சுளுவாக இருக்குமே என்று முடிவு செய்து ‘தலையில்லா முண்டம்’ கான்ஸெப்ட்டை இறக்கி விட்டிருக்கிறார்கள்.
அவர்கள் எதிர்பார்த்ததுக்கு மேல் ஜனங்கள் அதை ஊதிப் பெரிசாக்க ‘தொழில்’ ஏகபோகமாக, ஒருகட்டத்தில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் உஷாராகி புகார் கொடுக்க, போலீஸ் சுற்றி வளைத்து உள்ளே தள்ளியது.
அறிவிக்கப்படாத ஊரடங்கு ஒருவழியாக முடிவுக்கு வந்து, மீண்டும் காலேஜ் பெண்களின் ஒயில் நடையும் – ஐஸ் பாயுமாக கலகலப்புக்குத் திரும்பிக் களை கட்டியது திருவல்லிக்கேணி !
இன்றைய ஊரடங்கின் பின்னாலும் திருடர்கள் இருக்கலாம். அவர்களும் ஒரு நாள் மாட்டுவார்கள். அதைக் காலம் பார்த்துக்கொள்ளும்.
இப்போது நாம் அமைதியாக ஊரடங்கி இருந்து கொள்வதுதான் உத்தமம்.
அன்று போலவே இன்றைய ஊரடக்கமும் புரளிகள், அச்சங்களைக் கடந்து இனிதாய் முடியட்டும்! கொண்டாட்ட வாழ்வு திரும்பட்டும்!
அந்த கொரோனா முண்டம் தலைமறைவாகி ஒழியட்டும்!
**கட்டுரையாளர் குறிப்பு**
**வே.ஸ்ரீராம் சர்மா ** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
.
�,”