தடுப்பூசி போட்டால், பரிசோதனை வேண்டாம் : தேர்தல் அதிகாரி!

Published On:

| By Balaji

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், முகவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால், கொரோனா பரிசோதனை தேவையில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மையங்களுக்கு வரும் கட்சியின் முகவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

இதுகுறித்து இன்று(ஏப்ரல் 26) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில்,” வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் கட்சி முகவர்கள் 72 மணி நேரத்துக்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுத்து, அதில் நெகடிவ் என்று வந்திருக்க வேண்டும். சான்றிதழ் காட்டினால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இல்லையென்றால் முகவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டியிருந்தால், பரிசோதனை தேவையில்லை.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மேஜைகளில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்படும். மே 2ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு மேஜையில் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒரு தொகுதியில் 5 பூத்களில் விவிபேட் இயந்திரம் எண்ணப்படும். 4 லட்சத்து 99 ஆயிரத்து 964 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவருக்கு பதிலாக துணை தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்படுவார்.

சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்பாக பின்பற்றுவது, சுகாதாரத் துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது எழுத்து பூர்வமாக கிடைக்கபெற்றால், தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share