�
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்த நிலையில், இன்று ஒரு மாநிலத்திலேயே 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 20,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 93,528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு நாள் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் 2ஆவது அலை கைமீறிச் சென்றுவிட்டதாக தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரியர் தேர்வு விசாரணையின் போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் விஜய நாராயணிடம், தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை பரவி வருவது குறித்தும், தடுப்பூசி குறித்தும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், கொரோனா வைரசின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
அப்போது, நீதிமன்றங்களில் எந்த மாதிரியான தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்க அரசு தயாரா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம் அளிப்பார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், இன்றே சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்துவதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
**-பிரியா**
�,