கொரோனா பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதுவரை 88 நாட்கள், ஊரடங்கு – ஊரடங்கிற்குள் ஊரடங்கு – படிப்படியாகத் தளர்வுகள் – தீவிரமான முழு ஊரடங்கு என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன; ஆனால் நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவர் இன்று (ஜூன் 21) வெளியிட்ட அறிக்கையில், “ஜூன் 30க்குள் கொரோனா நோய்த் தொற்று முடிந்துவிடுமா என்று பார்த்தால் அதற்கான சிறிய அறிகுறிகூடத் தென்படவில்லை. கொரோனா இல்லாத மாவட்டங்களிலும் சேர்ந்து பரவியிருக்கிறதே தவிர, குறையவில்லை. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 845. இறந்தவர்கள் எண்ணிக்கை 704 ஆகிவிட்டது. தினமும் 2000 பேருக்கு மேல் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். தினமும் சுமார் 50 பேர் இறக்கிறார்கள். நேர்ந்துவரும் இந்தப் பேரழிவைத் தமிழக அரசோ, தமிழக முதல்வரோ எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனாவை முழுமையாக எப்போது கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு, ‘இறைவனுக்குத்தான் தெரியும், நாம் என்ன டாக்டரா?’ என்று ஊடகவியலாளர்களை நோக்கிக் கேட்டுள்ளார் முதல்வர் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “தனது அரசாங்கத்தால் செய்வதற்கு எதுவுமில்லை; செய்யத் தெரியவில்லை; செய்ய இயலவில்லை என்ற தனது இயலாமைக்கு, வேறுவேறு வார்த்தைகளின் மூலமாக முதலமைச்சர் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “கொரோனாவை மறைக்க முயற்சித்தார்கள். தடுப்பு நடவடிக்கையில் அக்கறை காட்டவில்லை. முதலில் விமானம் மூலமாகவும், ரயில் வழியாகவும் வந்திறங்கிய பயணிகள் மீது பழி போட்டார்கள்; பிறகு கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மீது பழி போட்டார்கள்; அதற்கடுத்து மக்கள் மீதே பழி சுமத்தினார்கள்; இப்போது இறைவன் தலையில் பழியையும், பாரத்தையும் ஏற்ற முயற்சி செய்துள்ளார்கள். இன்று கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்குப் பரவிவிட்டதும், ‘இந்த நோயை ஒழிக்க முடியாது, கட்டுப்படுத்தத்தான் முடியும்’ என்று முதலமைச்சர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
அரசாங்கத்தை நான் குற்றம் சொல்வதாக முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். குளறுபடிக்கு மேல் குளறுபடி, குழப்பத்திற்கு மேல் குழப்பம், குற்றத்துக்கு மேல் குற்றம் அரசாங்கம் செய்வதால்தான், நான் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகிறேன். கொரோனாவைத் தடுத்திருக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்குத் தானே உண்டு” என்றும் குறிப்பிட்ட ஸ்டாலின்,
“சமூகப் பரவல் இல்லை என்று அரசு சொல்லி வருகிறது. சமூகப் பரவலாக ஆகிவிடக் கூடாது; ஆனால், சென்னையில் பாதிக்கப்பட்ட சுமார் 1500 பேருக்கு யாரால் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை என்கிறார்கள். இதுதானே சமூகப் பரவலுக்கான முதல் அறிகுறி. இதனை அரசு கவனித்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அதனை அவரே மறுத்துவிட்டதாகவும், ஸ்டாலின் தான் அப்படிச் சொல்வதாகவும் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். அமைச்சருக்கு நோய்த்தொற்று இல்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியதுதான். மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்த மறுநாள் அவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் செய்தியை உறுதிப்படுத்திய பிறகு அவர் நலமடைய வேண்டி ‘ட்விட்டர்’செய்தி வெளியிட்டேன்.
அமைச்சருக்கே கொரோனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல் திரு. பழனிசாமி மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களும் அமைச்சர் அன்பழகனுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று ‘ட்விட்’ செய்திருந்தாரே அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பிய அவர்,
“முதலமைச்சர் அலுவலகத்தில் முதுநிலை தனிச்செயலராகப் பணியாற்றி வந்த பி.ஜே.தாமோதரன் அவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனார். ஆனால், முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ‘உடல்நலக் குறைவால்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதற்காக இதனை மறைக்க வேண்டும்? மறைப்பதன் மூலமாக என்ன கிடைத்துவிடப் போகிறது? கொரோனா மறைந்தது என்ற செய்தி தான் முதலமைச்சருக்கு நல்ல பெயர் வாங்கித் தருமே தவிர; கொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கைகளைக் குறைத்துக் காட்டுவதாலோ நல்ல பெயர் வாங்க முடியாது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்கு ஏன் அதிக சோதனைகள் நடத்தப்படவில்லை என்று கேட்கிறேன். சேலம் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு மட்டும் பாதுகாப்பு உடைகள் வழங்கியதைப் போல, சேலத்துக்கு மட்டும் பரிசோதனை செய்தால் போதுமா? பழனிசாமி இன்னமும் ‘சேலம் யூனியன் பிரதேச முதலமைச்சரைப்’போலத்தான் நடந்து கொள்கிறாரே தவிர, தமிழக முதலமைச்சராக எப்போது தன்னை நினைக்கப் போகிறார்? என்று கேள்வி எழுப்பியதோடு,
மக்கள் சொல்லும் ஆலோசனைகளை – மக்களின் பிரதிநிதிகள் சொல்லும் ஆலோசனைகளை – கேட்டு, பரிசீலித்து நடந்து, கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள் என்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன். அவரது நேற்றைய பேட்டி மனக்கவலை அளிப்பதாக உள்ளது; தமிழக மக்களின் கவலைகளைத் தீர்த்துவைப்பதாக இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**�,