கொரோனா அதிகரிப்பு, மரணங்கள் மறைப்பு: ஸ்டாலினின் 5 கேள்விகள்!

Published On:

| By Balaji

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் 5 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகமாகப் பரவும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் பாதிக்கப்படுபவர்களில் 70 சதவிகிதத்துக்கு மேல் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 15) காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.

“கொரோனா நோய்த் தொற்றால் தமிழகம் கடந்த 2 மாதங்களாக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. நாட்டின் பிற மாநிலங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்தி ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வரும் வேளையில் தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இறப்பு எண்ணிக்கையும் மாநிலத்தில் உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் தமிழகத்தின் நிலை குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் மாநில அரசோ நோயை கட்டுப்படுத்துவதில் திணறி வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், நோய் குறித்த தகவல்களை மறைக்கும் ஆளும் அரசின் போக்கு மிகவும் ஆபத்தானதாக உள்ளது.

முதற்கட்ட ஊரடங்கின் போது சராசரியாக தினமும் 40 பேர் என்ற அளவில் 1204 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 2வது ஊரடங்கின் போது 2750 பேர் தினமும் 101 பேர் அளவில் பாதிக்கப்பட்டார்கள். மே3 முதல் 17ம் தேதி வரையில் தினமும் சராசரியாக 586 பேர் என 8201 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது” என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “4வது கட்டத்தின் போது 22 ஆயிரத்து 333 பேர் தினந்தோறும் 904 பேர் என பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்றைய நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, “கடந்த 11 நாட்களில் மட்டுமே நோய்த் தொற்றின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. நாட்டிலேயே நோய் பரவலில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளதை ஆளும் அதிமுக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.குறிப்பாக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நாட்டின் பிற நகரங்களை விட நோய் பரவலின் விகிதம் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் ஒப்பிடுகையில் 10 சதவிகித நோயாளிகள் சென்னையில் உள்ளதோடு 5.2 சதவிகிதத்தில் அதிகரித்திருக்கிறது. முதலமைச்சர் பழனிசாமியின் பொறுப்பின்மையால் இன்று தமிழ்நாடு மிகவும் மோசமான பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலமாக உருவெடுத்துள்ளது” என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

கொள்ளை நோய் பரவி வரும் காலத்தில் பிரதமரிடமும், அகில இந்திய எதிர்க்கட்சிகளுடனும் கலந்தாலோசிக்க முடிந்த நிலையில், நம் மாநில முதலமைச்சரிடம் பேச முடியாமல் இருப்பது வேடிக்கையாகவும், வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,

“கொரோனா தொடங்கிய நாள் முதலே பரிசோதனை மற்றும் இறப்பு குறித்து அரசு தரப்பில் வெளிப்படையான தகவல்கள் கொடுப்பதில்லை. மே 28ம் தேதி கொரோனாவால் மரணித்தவர்களின் பட்டியலை ஜூன் 7ம் தேதி வெளியான செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மே 24-ஜூன் 7ம் தேதி வரை நிகழ்ந்த 7 மரணங்கள் நேற்று முன்தின செய்திக்குறிப்பில் சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது

கொரோனா காலத்தில் மரண நிகழ்வுகளை வெளியிடுவதில் அரசு தாமதிப்பது ஏன்? மரணங்களை பற்றிய தகவல்களே இல்லாமல் அரசு எப்படி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை எடுக்கிறது? சென்னையில் சுகாதார உட்கட்டமைப்பு நொறுங்கி போயுள்ளது என்பதையே இவையனைத்தும் வெளிப்படுத்துகிறது.ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 85 நாட்கள் ஆகியும் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை முறைப்படி கணக்கெடுக்கும் நடைமுறை உருவாக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டிய ஸ்டாலின், “அமைச்சர்களுக்கு இடையிலான ஈகோ போர் முடிவுக்கு வர வேண்டும். அதிகாரிகளுக்கு இடையிலான பதவிப் போட்டி தவிர்க்கப்பட வேண்டும். ஈகோ வாரை நிறுத்திவிட்டு நடவடிக்கையில் கவனம் செலுத்துங்கள்” என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 5 கேள்விகளையும் ஸ்டாலின் முன்வைத்தார். “1.மாநிலத்தில் கொரோனா தொற்று விகிதம் செங்குத்தாக அதிகரிப்பதற்கான காரணங்கள் எவை?

2. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான செயல்திட்ட விவரங்களை அரசு எப்போது வெளியிடும்?

3. கொரோனா குறித்து குழுவினரின் அறிக்கையை பொதுத் தளத்தில் முன்வைக்காமல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது என்று மக்களை ஏமாற்ற அரசாங்கம் எப்போதிருந்து திட்டமிடுகிறது?

4. எதிர்க்கட்சிகள், வல்லுனர்கள், விவரமறிந்த நிபுணர்களோடு ஒத்துழைக்க அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருவது ஏன்?

5. நிதி நிலை அறிக்கை மறுஒதுக்கீடு, பொருளாதார மறுமலர்ச்சி அல்லது கொரோனா ஏற்படுத்திய கடுமையான வேலையின்மை குறித்து முன்கூட்டிய அணுகுமுறையை அரசு எப்போது எடுக்கும்?” உள்ளிட்ட கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share