கொரோனா நடவடிக்கைகளில் அரசு வெளிப்படைத்தன்மையோடு செயலாற்றி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்தது. எனினும், கொரோனா உயிரிழப்புகள் தொடர்பான சந்தேகம் எழுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின், இறப்புகள் குறித்த சென்னை மாநகராட்சியின் கணக்குக்கும் சுகாதாரத்துறை கணக்குக்கும் வேறுபாடுகள் இருப்பதாகவும், சென்னையில் மட்டும் 400 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகம் எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்று (ஜூன் 14) கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
“முதலமைச்சர் தலைமையில் தமிழகம் முழுவதும் கொரோனோ வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருக்கக்கூடிய படுக்கை வசதிகளை விட இரண்டு மடங்கு படுக்கை வசதிகள் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்த விஜயபாஸ்கர்,
சென்னையில் கூடுதலாக 250 வாகனங்களுடன் கூடிய அதிவிரைவு மருத்துவக்குழுக்கள் களத்தில் செயல்படும் வகையில் நேற்றைய தினம் பணியை தொடங்கி உள்ளது. இக்குழுவில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், “இறப்பு வீதத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசு வெளிப்படைத் தன்மையோடுதான் அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு போராடி வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான், மருத்துவப் பணியாளர்கள் எவ்வித பிரச்சினையுமின்றி சிறப்பாக பணியாற்ற முடியும்” என்றும் குறிப்பிட்டார் விஜயபாஸ்கர்.
**எழில்**�,