தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி திருவண்ணாமலையில் விவசாயிகள் சங்கமம் என்ற பெயரில் ஒரு மாநாட்டையே நடத்தி முடித்திருக்கிறார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டு அழைப்பிதழில்…. தமிழக காங்கிரசின் அனைத்து மாவட்டத் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோஷ்டித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் பெயர்களையும் இடம்பெறச் செய்திருந்தார் அழகிரி.
இதுகுறித்து மின்னம்பலத்தில், [காங்கிரஸ் விவசாயிகள் சங்கமம்: கோஷ்டிகள் சங்கமம் ஆகுமா?](https://minnambalam.com/politics/2020/10/08/33/congress-coference-against-farm-acts-tamilnadu-thiruvannamalai-ksalagiri-inivite-all-leaders)என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
பொதுச் செயலாளர் செல்லகுமார் எம்பி, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், செயல் தலைவர்கள் ஜெயக்குமார் எம்பி, மயூரா ஜெயக்குமார், ஜோதிமணி எம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். திருநாவுக்கரசர், தங்கபாலு ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. தங்கபாலு உடல் நலக் குறைவால் கலந்துகொள்ளவில்லை. திருநாவுக்கரசர் கொரோனா தொற்று எச்சரிக்கை உணர்வு காரணமாக கலந்துகொள்ளவில்லை. ப.சிதம்பரம் காணொலி முறையில் மாநாட்டில் உரையாற்றி இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த அழகிரியைப் பாராட்டினார். அதேநேரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இம்மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தனது தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.
மாநாடு பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசினோம்.
“கொரோனா காலம் என்பதால் பிரதிநிதிகள் மாநாடாகத்தான் சமூக இடைவெளியோடு திட்டமிட்டிருந்தார் அழகிரி. அதன்படியே உணவுப் பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் அழகிரியின் அழைப்பை ஏற்று பல்வேறு நிர்வாகிகளும் திராவிட கட்சிகள் பாணியில் தத்தமது பகுதிகளில் இருந்து வேன்கள், பஸ்களில் கூட்டத்தைக் கூட்டி வந்துவிட்டனர். சுமார் 5 ஆயிரம் பேருக்கு மேல் வந்துவிட்டார்கள். எனவே பஃபே சிஸ்டத்தை மாற்றி 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
மொத்தம் 72 மாவட்டத் தலைவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வந்துவிட்டனர். சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோரின் ஆதரவு மாவட்டத் தலைவர்களில் சிலர் வந்தனர். சிலர் வரவில்லை
இப்படி ஒரு மாநாடு, ராகுல் போல தனக்கு டிராக்டரில் வரவேற்பு, திராவிட கட்சிகள் பாணியில் திரண்டம் கூட்டம் என அழகிரி உற்சாகமாகிவிட்டார். இதையடுத்து இதேபோல விவசாயிகள் சங்கமம் மாநாட்டை தமிழகத்தின் இன்னும் சில இடங்களிலும் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். அடுத்த மாநாட்டை திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும், அழகிரி டெல்லிக்கு ஏற்கனவே மாவட்டத் தலைவர்கள் பட்டியலை அனுப்பியிருக்கிறார். இந்த மாநாடு பற்றிய தகவல்கள் டெல்லி தலைமைக்கு எட்டி, திருப்தி அடைந்திருக்கும் நிலையில் அழகிரியின் மாவட்டத் தலைவர்கள் பட்டியல் விரைவில் ஓ.கே.ஆகலாம்” என்கிறார்கள்.
**-ஆரா**
�,”