காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி அமலாக்கத் துறை முன்பு ஆஜராகியுள்ள நிலையில், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு பண பரிவர்த்தனை முறைகேடு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஜூன் 23ஆம் தேதி ஆஜராகுமாறு புதிய சம்மனை அமலாக்கத்துறை அனுப்பியது.
அதுபோன்று வெளிநாட்டிலிருந்த ராகுல் காந்திக்கு இரண்டாவது முறையாகச் சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை ஜூன் 13ஆம் தேதி டெல்லி தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தது. ராகுல் காந்தி அமலாக்கத் துறை முன்பு ஆஜராகும் அன்று டெல்லி தலைமை அலுவலகம் முன்பும், தமிழகம் உட்பட அனைத்து மாநில அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தனர்.
டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. இருந்தபோதிலும் இன்று காங்கிரஸ் தொண்டர்கள் காலை முதலே அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு குவியத் தொடங்கினர். இதனால் அந்த சுற்று வட்டார பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டது
எனினும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து ராகுல் காந்தி தலைமையில், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அசோக் கெலாட், பூபேஷ் பாகல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாக அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கிச் சென்றனர். இந்த பேரணியால் காவல் துறையினரும், சிஆர்பிஎப் வீரர்களும் ராகுல் காந்தி வீடு, அமலாக்கத் துறை அலுவலகம் மற்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு குவிந்தனர்.
அதுபோன்று பேரணியாக சென்ற காங்கிரஸ் நிர்வாகிகளை பல்வேறு இடங்களில் போலீசார் கைது செய்தனர். அக்பர் சாலை, கியூ பாயின்ட் ஏபிஜே கலாம் சாலை மற்றும் மான் சிங் சாலை ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரைக் கைது செய்து மயூர் விஹார் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். எங்கள் தலைவர் ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் கண்டு பாஜக அரசு பயப்படுகிறது. மக்கள் விரோத பாசிச மோடி அரசை கண்டு நாங்கள் பயப்படமாட்டோம் என்றும் கோஷம் எழுப்பினர்.
இதனிடையே மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி 11 மணியளவில் அமலாக்கத் துறை முன்பு ஆஜராகினார். அவரிடம் 5 – 6 மணி நேரம் விசாரணை நடத்தப்படலாம் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிஎம்எல்ஏ சட்டத்தின் 50வது பிரிவின் கீழ் ராகுல் காந்தியின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். ஒரு உதவி இயக்குநர் கேள்விகளைக் கேட்பார் மற்றும் ஒரு துணை இயக்குநர் கேள்வி கேட்பதை மேற்பார்வையிடுவார். மற்றொரு அதிகாரி வாக்குமூலத்தைத் தட்டச்சு செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், ‘இது பொய் வழக்கு, சிபிஐ அமலாக்கத் துறை கைப்பாவையாகச் செயல்படுகிறது. கூண்டு கிளிகள் போல் உள்ளது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையைக் கையில் ஏந்தியுள்ளனர்.
தமிழகத்திலும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வழக்குத் தொடுத்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். 2024 தேர்தலில் காங்கிரஸ் தான் ஆட்சிக்கும் வரும் அப்போது ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுத்த இந்த அமலாக்கத் துறை அதிகாரிகளை சும்மா விடமாட்டோம் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோன்று பாதுகாப்புப் பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
**-பிரியா**