நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது அழுத்தமான புகாரை தமிழக அரசுக்குக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு சீமான் புத்துயிர் கொடுக்க முயற்சி செய்கிறார் என்றும் அதனால் அவரை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அறிக்கை விட்டிருந்தார். இந்த அறிக்கை ரொம்ப சீரியஸாகவே இருந்தது.
இந்த நிலையில் “இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும், அன்னை சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது. இத்தகைய கூட்டங்களில் வன்முறையைத் தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கிற போக்கிலும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், துணிவிருந்தால் என் மீது காவல்துறை வழக்கு தொடுக்கட்டும், கைது செய்யட்டும், சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன் என்று தமிழ்நாடு காவல் துறைக்கு சவால்விட்டுத் தொடர்ந்து பேசி வருகிறார். எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படாத, அடங்க மறுக்கிற அடாவடித்தனமாகச் செயல்படுகிற சமூக சீர்குலைவு சக்தியாக சீமான் விளங்கி வருகிறார். சீமான் மீது தமிழக காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து, இவரது சட்டவிரோத பேச்சின் அடிப்படையில் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் கே.எஸ்.அழகிரி.
இதுமட்டுமல்ல… இன்னொரு அதிர்ச்சிகர குற்றச்சாட்டையும் அவர் சீமான் மீது சுமத்தியுள்ளார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார். வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் பகுதியில் இவர் தங்கியிருந்த இடங்களில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், தமிழ்நாட்டிலிருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இவர் ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையிலிருந்து சமீபத்தில் வெளிவந்திருக்கிறார். சர்வதேச போதை கடத்தலில் சம்பந்தப்பட்டு பாகிஸ்தான், துபாய், இலங்கையில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டிருப்பதற்கான ஆதாரங்களும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் சிக்கியுள்ளன. அதேபோல, ஆயுதங்கள் கடத்தலிலும் இவர் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. வெளிநாடுகளில் வாழ்கிற விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இவர் மூலமாகப் பெரும் நிதியை வழங்கி வருகிறார்கள்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் கே.எஸ்.அழகிரி.
தமிழக காவல் துறை, தேசிய காவல் துறையான என்ஐஏ (இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட புலனாய்வு அமைப்பு) என இரு முனைகளிலும் சீமானைச் சுற்றி வளைக்க புகார்களை அடுக்குகிறது காங்கிரஸ் கட்சி.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், திமுக கூட்டணியின் முக்கிய கட்சித் தலைவருமான கே.எஸ்.அழகிரியின் இந்த அறிக்கை இரு நாட்கள் கழித்து அக்டோபர் 10ஆம் தேதி சீமான் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பொதுக்கூட்டத்துக்குச் செல்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்களை வெட்டி கேரளாவுக்குக் கடத்துபவர்களை எதிர்த்து நடந்த அந்த பொதுக்கூட்டத்தில் பேச வந்த சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்தது காங்கிரஸ். ஆனால், அதற்கு அனுமதி மறுத்த குமரி போலீஸார், சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாத அளவுக்கு குழித்துறை சாலையில் இருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தைச் சுற்றி முற்றுகை அமைத்தனர். “திமுக நமக்குக் கூட்டணிக் கட்சியா? சீமானுக்கு கூட்டணிக் கட்சியா” என்று குமரி காங்கிரஸாரே கேட்கிறார்கள். அந்த அளவுக்கு சீமானுக்கு ஒத்துழைப்பு அளித்தது போலீஸ். ஆனால் பொதுக்கூட்ட போஸ்டர்களை போலீஸார் கிழித்ததைக் கண்டித்து அந்த மேடையிலேயே போலீஸையும் திட்டினார்கள் நாம் தமிழர் நிர்வாகிகள். சீமான் பேசும்போது தொடக்கத்திலேயே காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தது காங்கிரஸாரை மேலும் சூடேற்றியது.
இந்தத் தகவல்கள் எல்லாம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு போய்தான், அடுத்த கட்டமாக அக்டோபர் 12ஆம் தேதி டிஜிபியிடம் சீமானை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையும், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியும் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
சீமான் மீது குண்டர் சட்டம், என்ஐஏ, பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்று சீரியஸாகப் பேசிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். ஆனால், சீமானோ என்னை கைது செய்து பார்க்கட்டும் என்கிறார்.
திமுக அரசு இதில் என்ன செய்து கொண்டிருக்கிறது?
“2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் இந்தியாவை ஆண்ட காங்கிரஸும், தமிழகத்தை ஆண்ட திமுகவும் கூட்டு துரோகம் செய்துவிட்டதாக சீமான் அப்போது மேடைகளில் கடுமையாக முழங்கிக்கொண்டிருந்தார். நாம் தமிழர் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட பிறகும் இது தொடர்ந்தது. இந்த நிலையில் காங்கிரஸின் அழுத்தத்தின் பேரில் அப்போது முதல்வர் கலைஞர் 2010ஆம் ஆண்டு சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட சீமானை அப்போது ஆங்காங்கே இருக்கும் தமிழ் உணர்வாளர்கள், திரைத்துறையில் இருக்கும் சிலர் ஆகியோர் மனு போட்டு சந்தித்து வந்தனர்.
நாம் தமிழர் கட்சிக்கு இப்போது இருக்கும் கட்டமைப்பு அப்போது சீமானிடம் இல்லை. அதன்பின் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்தார் சீமான். அது ஜெயலலிதாவுக்கு பெரிய அளவில் பயன்பட்டது.
இப்போது சீமானை மீண்டும் கைது செய்தால், என்ன நடக்கும் என்ற ஒரு ஸ்டெடியை தமிழக உளவுத் துறை மேற்கொண்டு வருகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சியில் அவருக்கு அடுத்து ஏராளமானோர் இப்போது பேசி வருகிறார்கள், இயங்கி வருகிறார்கள். மாவட்ட வாரியாக அவர்களின் பட்டியலை இப்போது தயாரித்து வருகிறது உளவுத் துறை. 2010 போல இப்போது சீமான் ஒற்றை ஆள் அல்ல என்பதையும், அவருக்குப் பின்னே உறுதியான ஒரு கூட்டம் இருப்பதையும் கருத்தில் கொண்டுதான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது உளவுத் துறை.
ஒருவேளை சீமான் கைது செய்யப்பட்டு விட்டால் இப்போது காங்கிரஸைத் திருப்திப்படுத்திவிடலாம். ஆனால், படிப்படியாக சதவிகிதக் கணக்கில் முன்னேறி வரும் சீமான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான பிரச்சார பீரங்கியாக மாறுவார் என்ற எச்சரிக்கைகளும் முதல்வர் ஸ்டாலின் முன்பிருக்கின்றன. எனவே, சீமான் கைது விஷயத்தில் ஸ்டாலின் யோசிக்கிறார் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.
இதையெல்லாம் அறிந்த சீமான் தான் கைது செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இப்போதைய நிலையில் தனக்கு மிகப் பெரிய அளவில் அது அரசியல் மைலேஜ் ஆக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.
அரசியல் ஆய்வாளர் ரவிந்திரன் துரைசாமியிடம் இதுகுறித்துப் பேசினோம்.
“சீமான் பாஜகவின் அஜெண்டாவை வேறு வகையில் செயல்படுத்துகிறார் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள். காங்கிரஸை தமிழினத்தின் எதிரி என்றும் பாஜகவை மனித குலத்துக்கே எதிரி என்றும் சீமான் வரையறுக்கிறார். பாஜக விநாயகரை கையிலெடுக்கிறது. சீமான் முருகனை கையிலெடுக்கிறார். பாஜக விவேகானந்தரை கையிலெடுக்கிறது. சீமான் வள்ளலாரையும், வைகுண்டரையும் கையிலெடுக்கிறார், பாஜக ஜான்சி ராணியை கைக்கொள்கிறது. சீமான் வேலு நாச்சியாரை முன்மொழிகிறார். பாஜக சத்ரபதி சிவாஜியை முன்னிறுத்துகிறது. சீமான் மருதுபாண்டியரை முன்னிறுத்துகிறார். இதுதான் சீமானுக்கும் பாஜகவுக்கும் உள்ள உறவு. இது உறவா, வேறுபாடா என்பதை மக்கள் அறிவார்கள். அதேநேரம் எல்லா கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதையும் சீமான் வலியுறுத்துகிறார்.
இப்போது சீமான் கைது செய்யப்பட்டால் அவர் திமுக – காங்கிரஸுக்கு எதிரான முக்கிய தலைவராக உருவெடுப்பார். சீமான் தேர்தலுக்குத் தேர்தல் தனது வாக்கு வங்கியை வளர்த்து வருகிறார். குறிப்பாக இளைஞர்கள் அவர் பின்னால் நிறைய திரள்கிறார்கள். சீமான் கைது செய்யப்பட்டால் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்கூட அவருக்கான ஆதரவு கூடவே வாய்ப்புள்ளது. இதை முதல்வர் ஸ்டாலினும் அறிவார். எனவே சீமான் என்ற ஒரு வளரும் சக்தியை நுண்ணிய அறிவோடு கையாள்வதுதான் ஸ்டாலினுக்கும் நல்லது” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
**-ஆரா**
�,”