காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி எனப்படும் தலைமைச் செயற்குழு இன்று (ஜனவரி 22) காணொலிக் காட்சி முறையில் கூடியது. இதில் கட்சித் தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற அதிருப்தியாளர்களுக்கும், சோனியா-ராகுல் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக டெல்லி ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதம் கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் கட்சிக்கு புதிய தலைவர் ஆறு மாதத்துக்குள் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறு மாதங்கள் ஆகிவிட்ட சூழலில் இன்று கூடிய செயற்குழுவில் கட்சியின் தலைவர் தேர்தல் மற்றும் அமைப்பு தேர்தலை மேலும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, ’தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் அதில் கவனம் செலுத்த வேண்டி, கட்சியின் அமைப்புத் தேர்தலை மே மாதம் நடத்த பரிந்துரைத்தார்.
கட்சியின் தேர்தல் ஆணையத்துடைய இந்த பரிந்துரைக்கு ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ‘கட்சியின் தலைவர் தேர்தல் உள்ளிட்ட அமைப்புத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு புதிய செயல்படும் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’என்று வலியுறுத்தினார்கள்.
இதற்கு எதிர்வினையாக அசோக் கெலாட், ஏ.கே. அந்தோணி, உம்மன் சாண்டி, அம்பிகா சோனி உள்ளிட்டோர், ‘கட்சி இப்போது முக்கியமான மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கவனம் செலுத்தாமல் உட்கட்சித் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டுமென்று கூறுவது சரியல்ல’ என்று வாதிட்டிருக்கிறார்கள்.
ஆனபோதும் காங்கிரஸ் காரிய கமிட்டியில் ராகுல் -சோனியா ஆதரவாளர்களுக்கு பெரும்பான்மை இருப்பதால்… கட்சியின் தலைவர் தேர்தல் மே, ஜூன் மாதங்களில் நடக்கும் என்ற தீர்மானம் நிறைவேறியது.
**வேந்தன்**
�,