நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக நான்கு இடத்திலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் 20 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கோவா முன்னணி கட்சி 1 இடத்திலும், சுயேச்சைகள் 3 இடத்திலும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் 2 இடத்திலும், வெற்றி பெற்றுள்ளன.
பெரும்பான்மையைப் பிடிக்க இன்னும் ஒரு இடம் வேண்டும் என்ற நிலையில் பாஜக மற்ற கட்சி வெற்றியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. 10 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது.
அதுபோன்று பஞ்சாபில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 2022 தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி 89 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியைச் சந்தித்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக47 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 32 இடத்தில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. இதில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக 173 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களின் தீர்ப்பைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்தலுக்காகக் கடினமாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தேர்தலிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் இந்திய மக்களின் நலன்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
**-பிரியா**