சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. வெளுத்து வாங்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி வேனில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஓய்வின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான மு.க. ஸ்டாலினை ஆதரித்து சென்னை திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாம் அதிகரித்துவிட்டது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் காரணம். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை 108 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை 70 ரூபாயாகத்தான் இருந்தது. தற்போது கச்சா எண்ணெய்யின் விலை 54 டாலராக குறைந்துவிட்டது. ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துவிட்டது” என்று விமர்சனம் செய்தார்.
“ஒரு அரசின் கடமை என்பது விலைவாசியை கட்டுப்படுத்துவது தான். ஆனால் மோடி அரசால் சிறந்த பொருளாதார கொள்கையை செயல்படுத்த முடியாததால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது இலவச சிலிண்டர் மற்றும் வாஷிங் மிஷின், கொடுப்பதன் மூலம் நாடு வளர்ச்சி அடைந்துவிடாது. நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சிறந்த பொருளாதார கொள்கை வேண்டும். எனவே திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தவழ்ந்து வந்து பதவியை பெற்றார் என்று ஸ்டாலின் சொன்னதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. அவர் நடந்து வந்தாரா, ஊர்ந்து வந்தாரா, தவழ்ந்து வந்தாரா என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் அவர் நடந்து வந்து பதவியைப் பெறவில்லை என்பது மட்டும் தெரியும்.
நமது கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தமிழகத்தில் தேர்தல் நடக்கும் போது, ஸ்டாலின் தான் முதல்வராவார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சொன்னார். நம் கூட்டணியில் உள்ள அனைவரும் இதைதான் சொல்லி வருகிறோம். ஆனால் எதிர்க்கட்சிகளால் இவர் தான் முதல்வர் என சொல்லமுடியவில்லை. பாஜக, பாமக எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என நீண்ட காலமாகச் சொல்லவில்லை. இறுதியாகத்தான் முடிவு செய்தார்கள். ஏனென்றால் அவர்கள் சந்தர்ப்ப வாதிகளாக உள்ளனர்.
ஜெயலலிதாவுக்கும் நமக்கும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் நம் மாநில நலன் என்று வரும் போது மத்திய அரசைத் தீவிரமாக எதிர்த்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது லேடியா? மோடியா? என்று கேட்டார். தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் மத்திய அரசை எதிர்த்து ஏதேனும் கேள்விகளைக் கேட்க முடியுமா?. எடப்பாடியா? மோடியா? என்று அவரால் கேள்வி எழுப்ப முடியவில்லை.
இந்தியாவில் வேற்றுமை இருக்கிறது. ஆனால் நாம் ஒன்றாக இருக்கிறோம். மோடி ஆட்சி தொடர்ந்தால் இந்த ஒற்றுமை பிளவுபடுத்தப்படும். மோடிக்கு முன்னாள் ஈபிஎஸும், ஓபிஎஸும் எப்படி நிற்கிறார்கள் என்று பார்க்கிறோம். ஆனால் வரலாற்றைப் பாருங்கள்…. முதல்வராக இருந்த கலைஞர், காமராஜர், என்.டி.ராமா ராவ் உள்ளிட்டோர் பிரதமர்களுடன் ஒன்றாகச் சமமாக அமர்ந்து பேசுவார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி பிரதமருடன் உட்கார்ந்து பேச முடியாத ஆற்றல் இல்லாதவர்களாக இருக்கிறார்.
மத்திய அரசோடு சுமுகமாக இருக்கலாம், ஆனால் அடிமையாக இருக்கக் கூடாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 15 லட்சம் ரூபாய் வங்கியில் போடுவதாகத் தெரிவித்தார். அதுவே தராமல் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார். தற்போது அப்படிதான் வாஷிங் மிஷின், சிலிண்டர் தருவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஸ்டாலின் ஒரு சிறந்த தலைவர். இன்று காமராஜர், கலைஞர், ஜெயலலிதா போன்று பெயர் சொல்லும் தலைவர்கள் இல்லாத நிலையில், ஸ்டாலின் தான் பெயர் சொல்லும் தலைவராக இருக்கிறார் என்று கூறி திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தார்.
திமுக கூட்டணி சிறந்த ஆட்சியைக் கொடுக்கும், அதிமுக போன்று முதுகெலும்பு இல்லாத ஆட்சியாக இருக்காது என்றும் குறிப்பிட்டார் கே.எஸ்.அழகிரி.
**-பிரியா**
�,