காங்கிரஸ் வரலாறும், இந்திய வரலாறும் கூறுவது என்ன?

politics

ராஜன் குறை

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் எதிர்பாராதது என்று எதுவும் பெரிதாக நடக்கவில்லை. பஞ்சாபில் ஆம் ஆத்மி பெற்றுள்ள பெருவாரியான வெற்றிதான் எதிர்பாராதது எனலாம். அதன் காரணம் அம்ரீந்தர் சிங்கின் ஆட்சி எந்த அளவு அதிருப்தியைப் பெற்றிருந்து என்பது வெளியில் தெரியாததுதான். இப்போது அதை துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. கருத்துக்கணிப்புகள் அடிப்படையிலான தரவுகள் அதைக் கூறுகின்றன. வெகுகாலமாகவே பஞ்சாபில் காங்கிரஸும், அகாலி தளமும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. குறிப்பாக, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் காங்கிரஸின் அம்ரீந்தர் சிங்கும், அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதலும் முறையே பத்து மற்றும் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். இரண்டு ஆட்சியிலும் அதிருப்தியடைந்த மக்கள் மூன்றாவது தேர்வுக்கு நகர்ந்துள்ளனர். இது விரிவாக ஆராயத் தகுந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு பஞ்சாபில் நுழையும் வாய்ப்பில்லை. காங்கிரஸ் தோல்வியில் மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்.
ஆனால், காங்கிரஸ் குறித்து 2014 முதலே கேட்கத் தொடங்கிவிட்ட இரங்கற்பாக்கள் மீண்டும் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சிக்கு இனிமேல் பொருத்தப்பாடு கிடையாது என்பவர்கள், நேரு குடும்ப தலைமையிலிருந்து காங்கிரஸ் விடுபட வேண்டும் என்பவர்கள், காங்கிரஸை கலைத்துவிட வேண்டும் என்பவர்கள் எனப் பல குரல்களும் மறுபடியும் ஓங்கி ஒலிக்கின்றன. ஏகப்பட்ட அறிவுரைகள். காங்கிரஸ் மென் இந்துத்துவா கட்சியாகிவிட்டது என்பார் ஒருவர்; காங்கிரஸ் வேர்மட்டத்தில் வேலை செய்வதில்லை என்று அறிவுறுத்துவார் இன்னொருவர். இப்படியாகப் பல்வேறு குரல்கள், கோரஸ் என்று கூறப்படும் சேர்ந்திசை பாடல்கள் பாடுகின்றன. என் பார்வையில் காங்கிரஸ் குறித்தும், இந்திய வரலாற்றில் அது வகித்துள்ள பாகம் குறித்தும் ஆழமாகச் சிந்திக்காமல் அதன் நிகழ்காலம், எதிர்காலம் குறித்துப் பேசுவது தவறு என்று தோன்றுகிறது. சுருக்கமாக சில அம்சங்களைக் கூற விரும்புகிறேன்.
**காங்கிரஸ் என்றால் என்ன? **
காங்கிரஸ் என்ற சொல்லின் பொருள் பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் சந்தித்து உரையாடுவது, விவாதிப்பது அல்லது குறிப்பிட்ட துறையில் வல்லுநர்கள், அறிஞர்கள் சந்தித்து விவாதிப்பது. பல நாடுகளில் நாடாளுமன்றங்கள் காங்கிரஸ் என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு துறை சார்ந்த மாநாடுகளும், கட்சி மாநாடுகளும் காங்கிரஸ் என்று அழைக்கப்படுகின்றன. இதையெல்லாம் சிந்தித்தால் காங்கிரஸ் என்ற சொல் அடிப்படையிலேயே ஒரு கூட்டமைப்பு என்பது உணரப்படும். அது ஒரு மன்றம், கூடுகை அல்லது தளம். பல்வேறு நோக்குகள் கொண்டவர்கள், பார்வைகள் கொண்டவர்கள் இணைந்து பணியாற்றும் மன்றம். கருத்தியல் ரீதியான கருத்தொருமிப்புகள் வெவ்வேறு காலங்களில் ஏற்படலாம்; வெகுஜன தலைமை என்பது உருவாகலாம். ஆனால் அவை எதுவுமே பன்முகப் பார்வைகளைத் தவிர்க்க முடியாது. பல்வேறு மக்கள் தொகுதிகளின் நலன்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகளைப் பேசித்தான் தீர்க்க வேண்டும். இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்றுதான் பங்கிட முடியும். இதில் எப்போதுமே வெற்றி கிட்டாது. அதிருப்திகள் பெருகும். ஆனாலும் நீண்ட கால நோக்கில் இது மக்களாட்சியின் தவிர்க்க முடியாத அங்கம்.
இதற்கு எதிர்முனையில் இன்று வலுமிக்க சக்தியாக உருவாகியுள்ள பாரதீய ஜனதா கட்சி, ராஷ்டிரிய சுவம்சேவக் சங், சுருக்கமாக ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பின் உறுப்பினர்களால் வழி நடத்தப்படும் வெகுஜன கட்சி. அதில் திட்டவட்டமான முன் தீர்மானிக்கப்பட்ட கருத்தியலும், குறுகிய அடையாளவாத அரசியலும் உண்டு. அந்த அமைப்பு பார்ப்பனீய இந்து மத கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார தேசியத்தையும், மத அடையாள அரசியலையும் வெளிப்படையாகப் பின்பற்றுகிறது. அதற்குள்ளும் தங்களுக்குள் மாறுபடும் சில கருத்தியல் போக்குகள் இருக்கலாம். ஆனால் அதெல்லாம் முக்கியத்துவம் பெறாது. இஸ்லாம், கிறிஸ்துவம் போன்றவை அந்நிய மதங்கள் என்று அவர்களை எதிரிகளாகக் கட்டமைக்கும் தீவிரத்தில் பிற சிறிய கருத்தியல் மாறுபாடுகள் அடிபட்டுப் போகும். முழுவதும் தலைமைக்கு கீழ்படிந்து நடப்பது, தொடர்ந்து கட்சி அணியினரையும், மக்களையும் மூளைச்சலவை செய்வது, பெருமுதலாளிகளுக்கும், ஜாதியாதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக இருப்பது, தனி மனித உரிமைகள், பல்வேறு தொகுதிகளின் போராட்ட உரிமைகள், கலாச்சார பன்மை அடையாளங்கள் ஆகியவற்றை நசுக்குவது ஆகியவை அதன் அறியப்பட்ட செயல்முறைகள்.
எனவே காங்கிரஸ் என்ற பெயரே ஓர் அரசியல் தத்துவம் என்பதையும், அது ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் இந்து ராஷ்டிரம் என்ற பாசிச அரசியல் அடையாளத்துக்கு முற்றிலும் மாறானது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம், எப்படி அரசியலைப் பரிசீலிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதன் சரியான பொருளில் காங்கிரஸ் என்பது ஒரு கட்சி மட்டுமல்ல. மக்களாட்சி என்பதே காங்கிரஸ்தான்; அதாவது அதுபோன்ற ஒரு பல்வேறு முரண்பாடுகளுக்கும், சமன்பாடுகளுக்கும் இடமளிக்கும் கட்சியமைப்புதான்.


**இந்திய வரலாறும், காங்கிரஸ் வரலாறும் **
இந்திய தேசிய காங்கிரஸ்தான் முதலில் தோன்றியது. அதுதான் இந்தியாவை உருவாக்கியது. காங்கிரஸை உருவாக்கியவர்கள் படித்த, செல்வாக்குமிக்க மனிதர்கள்; மக்களாட்சி சிந்தனை கொண்ட ஆங்கிலேயர்களும் அதில் அடக்கம். இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து படித்தவர்கள், குறிப்பாக ஆங்கிலேய நீதி பரிபாலன அமைப்பில் சட்டம் படித்து வக்கீலாக விளங்கியவர்கள், நிர்வாகப் பயிற்சி பெற்றவர்கள், வர்த்தகர்கள், தனவந்தர்கள், புதிய தொழில்முனைவோர்கள் எனப் பலரும் இடம் பெற்றனர். ஆங்கிலத்தில் இத்தகைய சமூக பிரிவினரை சிவில் சமூகம் என்பார்கள். காங்கிரஸின் தோற்றம் ஒரு இந்திய சிவில் சமூக அமைப்பாக ஆங்கிலேய ஆட்சியிடம் இந்தியர்களின் நலன்களை முன்னிறுத்தி பேசுகின்ற அமைப்பாக விளங்கியது. இந்த அமைப்பில் ஆங்கிலேய ஆட்சியை உடனே அப்புறப்படுத்த விரும்பும் தீவிரவாத சிந்தனை கொண்டவர்களும் இணைந்தார்கள். எனவே மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரு பிரிவு ஏற்பட்டது. ரஷ்யப் புரட்சிக்குப் பின் சோஷலிஸ முனைப்பு கொண்டவர்களும் இதில் தோன்றினார்கள். ஆனால், இவர்கள் யாரும் வெகுஜன ஆதரவை ஈட்டுவதில் பெரிய வெற்றியைப் பெற்றதாகக் கூறமுடியாது. அவ்வப்போது சில மக்கள் எழுச்சிகள் தோன்றினவே தவிர, பரவலாக மக்களை அரசியலில் ஈடுபடுத்தும் சாத்தியம் தோன்றவில்லை. அந்த சாத்தியம் காந்தியின் வருகைக்குப் பின்னாலேயே தோன்றியது.
காந்தியின் வெகுஜன செல்வாக்கு காங்கிரஸ் கட்சியினர் யாரும் மக்களிடையே திரட்டக் கூடிய ஆதரவை விட பன்மடங்கு அதிகமாக இருந்தது. அவர் மகாத்மா என்றும், அளப்பரிய சக்திகள் கொண்டவர் என்றும், மனிதருள் தெய்வம் என்றும் மக்களிடையே நம்பிக்கைகள் பெருகின. காந்தி மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே புதிய பாதையை உருவாக்கினார். வன்முறையை முற்றிலும் தவிர்த்து அகிம்சையை முன்வைத்தார். கதர் இயக்கம், கள்ளுண்ணாமை. அரிஜன சேவை என்று புதிய நிர்மாணத்திட்டங்களில் பெருந்திரளான மக்களை ஈடுபடுத்தினார். ஆங்கிலேயர்களுக்கு வெகுஜன மக்கள் திரள் சக்தியின் ஆற்றலைப் புரியவைத்தார். குறிப்பாக இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஆன்மிக ஒருங்கிணைப்பாக முன்வைத்தார்.
இந்த நிலையில் காங்கிரஸில் மூன்று விதமான தலைவர்கள் இருந்தார்கள். படித்த, செல்வாக்கு மிக்க சிவில் சமூக தலைவர்களான சட்டபூர்வமாக மாற்றத்தைக் கொண்டுவர விரும்பிய மிதவாதிகள். அடுத்து அதேபோல படித்த தீவிரவாத நோக்கு கொண்ட புரட்சிகர மனப்பான்மையுள்ள இளைஞர்கள். இவர்களில் பலர் சோஷலிஸ நோக்குடனும் இருந்தனர். மூன்றாவதாக உள்ளூர் செல்வாக்குள்ள தாய்மொழி பேசும் பிரதேசத் தலைவர்கள். இவர்களிலும் முற்போக்கு சிந்தனையுள்ளவர்களும், மரபார்ந்த சிந்தனையுள்ளவர்களும் இருந்தார்கள். காங்கிரஸ் மிகப்பெரிய கருத்தியல் கலவையாகத்தான் இருந்தது; இயங்கியது. காந்தியின் வெகுஜன செல்வாக்கு அதன் ஒருங்கிணைப்பு விசையாக இருந்தது எனலாம்.


**சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் **
காந்தி சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸை கலைத்துவிடச் சொன்னார் என்பதை அடிக்கடி பலரும் கூறுகிறார்கள். அப்படி நடந்திருந்தால் நாடு நாசமாகப் போயிருக்கும் என உறுதியாகச் சொல்லலாம். தரிசனமிக்க, அறிவாற்றல் மிகுந்த இளம் தலைவரான ஜவஹர்லால் நேருவை தன் வாரிசாக சுட்டிக்காட்டியதன் மூலம் நாட்டை சரியான திசையில் செலுத்திவிட்டு மறைந்தார் காந்தி.
நேருவினால் எல்லா பிரச்சினைகளிலும் சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை என்பது இயல்பானது. இவ்வளவு பிரமாண்டமான, அளப்பரிய பன்மைத்துவம் கொண்ட நாட்டினை ஒரு குடியரசாக உருவாக்குவது என்பது அசாதாரணமான வரலாற்றுப் பணியாகும். அதிலும் காங்கிரஸில் இருந்த மரபுவாதிகளையும், சுதந்திரவாதிகளையும், புரட்சிவாதிகளையும் சமன் செய்து சமாளிப்பது என்பது சாத்தியமேயில்லை எனலாம். சிந்தித்துப் பார்த்தால் அவரும் வெகுஜன செல்வாக்கு, ஈர்ப்பு என்பதன் அடிப்படையிலேயே இந்தியக் குடியரசை நிலைபெறச் செய்தார் எனலாம். இரண்டு பிரச்சினைகளை அவர் தீர்க்காமல் விட்டுச் சென்றார். ஒன்று மாநில அரசுகளின் உரிமைகள்; இரண்டு ஜாதீய சமூகத்தினைத் தளர்வுறச்செய்து ஜாதி ஆதிக்கத்தை அகற்றி, சமத்துவத்தை ஏற்படுத்தும் பெரும் பணி.
ஆனால் காங்கிரஸ், நேருவுக்குப் பின் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், சோனியா காந்தி – மன்மோகன் சிங் ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் தொடர்ந்து இந்தியாவின் முரண்களை சமன்செய்தும், கூடியவரை அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் ஓரளவாவது ஈடு செய்யும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது எனலாம். எத்தனையோ தவறுகள், நிர்பந்தங்கள், சறுக்கல்கள் எல்லாம் இருந்தாலும் இன்றும் இந்தியாவின் அனைத்து மக்களும் இணைந்து பேசக்கூடிய களமாக, ஒருங்கிணைப்பு ஆற்றலாக காங்கிரஸ் இருக்கிறது.


**இந்துத்துவத்தின் எதிர்மறை பங்களிப்பு **
காலனீய ஆட்சியின் இறுதிப் பகுதியில் இந்துக்களை மத அடையாளத்தில் ஒருங்கிணைத்து முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பாக மாற்றி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் பெரும் வன்முறை வெடிப்பினூடாக உருவாக கணிசமான காரணமாக அமைந்தன ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா ஆகிய அமைப்புகள். காலனீய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதிலோ, இந்தியாவை ஒரு குடியரசாக, மாநில அரசுகளின் ஒன்றியமாக வடிவமைப்பதிலோ இவர்களுக்கு பங்கு எதுவும் இல்லை (அதனால்தான் காங்கிரஸ்காரரும், காந்தி, நேரு ஆகியோருக்கு அணுக்கமானவருமான படேலின் பிம்பத்தை திருடி சிலை வைத்து மகிழ்கிறார்கள்). ஆனால், தொடர்ந்து பார்ப்பனீய மீட்புவாத சக்திகளை உருவாக்குவதிலும், காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்து முற்போக்கு முயற்சிகளைத் தடுப்பதிலும் பெரும் பங்காற்றினார்கள். எழுபத்தொன்பது வயதான காந்தியை கொல்வதற்கு வழி வகுத்தார்கள். தொடர்ந்து சமஸ்கிருதமயமான இந்தியை தேசிய மொழியாக்குவது, ராமஜென்ம பூமி, பசுவதை தடுப்பு என இந்து அடையாள அரசியல் அழுத்தம் கொடுப்பது, முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிரான பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபடுவது என எதிர்மறை செயல்பாடுகளை தொடர்ந்தார்கள். கம்யூனிசம், சோஷலிசம் ஆகியவற்றை அறவே வெறுப்பது, நிலவுடைமை சக்திகள், கார்ப்பரேட் முதலீட்டிய சக்திகள் இரண்டையுமே நேரத்துக்குத் தகுந்தாற்போல் ஆதரிப்பது, பார்ப்பனீய மீட்புவாதத்தை பிரச்சாரம் செய்வது எனச் செயல்பட்டார்கள்.
இதன் தொடர்ச்சியாக இன்று இந்திய ஒன்றிய அரசை ஒற்றை அரசாக மாற்றுவது, கலாச்சார பன்மையை ஒடுக்குவது, பார்ப்பனீய மீட்புவாத கலாச்சார அடையாளத்தை நிலை நிறுத்துவது, இந்து ராஷ்டிரம் என்ற இலக்கை நோக்கி நகர்வது, அதற்காக பெருமுதலீட்டிய நலன்களை முழுமையாக முன்னிலைப்படுத்துவது எனச் செயல்பட்டு மாநிலங்களில் வலுப்பெற்று வரும் அரசியல் கட்சிகளுக்கும், ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்புக்கும் உள்ள முரண்களையும், சமூக அமைப்பின் முரண்களையும் பயன்படுத்தி ஒன்றிய அரசில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

**இன்றைய அரசியல் சூழல் **
இந்த இந்துத்துவ சவாலுடன் காங்கிரஸ் தொடர்ந்து போராடி வருகிறது. இன்றைய நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அரசியல் எழுச்சியால் இந்திய அரசியல் என்பது மாநிலங்களில் மையம் கொண்டுள்ளது. காங்கிரஸின் அனைவரையும் உள்ளடக்கிய, பிரதிநிதித்துவ மக்களாட்சி அணுகுமுறையைப் பல்வேறு மாநிலங்களில் மாநில அளவில் அரசியல் கட்சிகள் தன்வயப்படுத்திவிட்டன. இன்றைய நிலையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி ஆகிய இரண்டுமே எல்லா மாநிலங்களிலும் செல்வாக்குடன் இல்லை. அந்த இரு கட்சிகளின் மாநில அமைப்புகளுமே தொடர்ந்து மாநிலங்களின் அரசியல் தனித்துவத்தை ஏற்க வேண்டியவையாக உள்ளன. ஆனால் இந்த சூழ்நிலைக்கு பொருந்தாத விதத்தில் ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன.
இன்றைய நிலையில் இந்த முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்து இந்தியாவில் கூட்டாட்சியையும், சமூக நீதியையும் பரவலாக முன்னெடுக்கும் வரலாற்றுத் தேவையை உணரும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைவர் ராகுல் காந்திக்கும்தான் உள்ளது. பாரதீய ஜனதா வரலாற்றின் விசைக்கு எதிராகச் செல்லும் மீட்புவாத பிற்போக்கு சக்தியாக உள்ளது. பாரதீய ஜனதாவின் ஒற்றை அரசுக் கனவு, பேரரசுக் கனவுகளை முறியடித்து, மாநிலக் கட்சிகளுடன் ஒன்றிய அரசில் ஒருங்கிணைப்பு சக்தியாக காங்கிரஸ் செயல்படுவது என்பது காலத்தின் கட்டாயம் எனலாம்.
எனவே காங்கிரஸுக்கு முடிவுரை எழுதும் முதிர்ச்சியற்ற மனிதர்கள் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் வேர்கொண்டுள்ள மக்களாட்சி அந்த வரலாற்றைத் திசை திருப்ப அனுமதிக்காது. அந்த வரலாற்றின் வெளிப்பாட்டுக்கு ஆகச்சிறந்த உதாரணம் திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் மிகையாகாது. அதனால்தான் ராகுல் காந்தி தமிழகத்தை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் பேசுகிறார். முதல்வர் ஸ்டாலின் தன் வாழ்க்கை வரலாற்றை வெளியிட ராகுல் காந்தியை அழைக்கிறார். வரலாற்றுப் பாதையின் திசைகாட்டி இதுதான்.

**கட்டுரையாளர் குறிப்பு:**

**ராஜன் குறை கிருஷ்ணன் **- பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *