இந்தியாவுக்கு இரு நாள் பயணமாக வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று (பிப்ரவரி 24) அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மாலை ஆக்ராவில் தாஜ்மஹாலை பார்வையிட்டார்.
நாளை அவர் அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்னர், டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் டிரம்புக்கு பெரிய அளவில் ஒரு விருந்து அளிக்க இருக்கிறார். இந்த விருந்தில் இந்தியாவின் அனைத்து முதல்வர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விருந்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை என்று கூறி அக்கட்சி விருந்தைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.
விருந்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள மாட்டார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் இந்த விருந்தில் முன்னாள் பிரதமர் என்ற முறையில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றிருந்தார் மன்மோகன் சிங். ஆனால் இன்று (பிப்ரவரி 24) மாலை மன்மோகனுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அவர் விருந்தில் பங்கேற்கமாட்டார் என்று பிடிஐ தெரிவிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்த விருந்துக்கு அழைக்கப்படாததால் காங்கிரசை சேர்ந்த மன்மோகன் சிங் புறக்கணித்திருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசும்போது, “அதிபர் டிரம்ப் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவையும், இந்தியப் பிரதமர் மிகப்பெரிய ஜனநாயகக நாடான இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஜனநாயகம் பல்வேறு தாக்கங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் உள்ளார்ந்த கண்ணியமும் மரபும் இருக்கிறது.
மோடி அமெரிக்காவுக்குச் சென்றபோது… குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஹவுடி மோடி நிகழ்வில் மேடையில் கலந்து கொண்டனர்.
ஆனால் இங்கே, மோடியின் அகராதியில் ஜனநாயகத்தின் பொருள் மாறிவிட்டது. இங்கே, இது இந்திய நிகழ்ச்சியாக இல்லை… இந்தியா மோடிக்கு சொந்தமானது போல… ஒரு மோடி நிகழ்ச்சியாக மட்டுமே இருக்கிறது. காங்கிரஸ் 134 ஆண்டுகள் பழமையான ஜனநாயகக் கட்சி, எங்கள் தலைவர் அனைத்து ஜனநாயக நாடுகளாலும் அங்கீகரிக்கப்படுகிறார். ஆனால் இந்திய ஜனநாயகத்தின் நிகழ்வில் அவர் அழைக்கப்படவில்லை . இது காங்கிரசுக்கு நேரடி அவமதிப்பு. எனவே காங்கிரஸ் அதில் பங்கேற்க வாய்ப்பில்லை” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
**-வேந்தன்**
�,