டெல்லி கலவரம் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.
டெல்லியில் சிஏஏ போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 35 பேர் வரை உயிரிழந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து ரஜினி கருத்து தெரிவித்ததற்கு திருமாவளவன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். பாஜக தரப்பிலிருந்து பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் ரஜினிக்கு எதிர்வினையாற்றினர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று (பிப்ரவரி 28) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “உள் துறை அமைச்சரே செயல்பாடுகள் இழந்துவிட்டார் என்று நாங்கள் சொல்கிறோம். ரஜினிகாந்த் உளவுத் துறை தோல்வி என்று சொல்வது என்ன அர்த்தத்தில்? அமித்ஷாவை ரஜினி காப்பாற்றுகிறார் அவ்வளவுதான். அமித்ஷாவை குறை சொல்லக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் மீது குற்றம்சொல்கிறார்” என்று விமர்சித்தார்.
மேலும், “நான் டெல்லியில்தான் இருந்தேன். மக்கள் ஒருவரையொருவர் மிருகம் போல தாக்கிக்கொள்கிறார்கள். அஞ்சி ஓட வேண்டியதாக இருக்கிறது. இவ்வளவையும் பார்க்கும்போது உளவுத் துறை ரகசியத் தகவலா அனுப்ப வேண்டும். அமித்ஷா சரியில்லை என்று சொல்ல ரஜினி தயங்குகிறார். ஆகவே உளவுத் துறை மீது புகார் சொல்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.
எனினும் ரஜினிகாந்த், “டெல்லி கலவரம் என்பது உளவுத் துறையின் தோல்வி. அப்படியென்றால் அது உள் துறை அமைச்சகத்தின் தோல்வி” என்று கூறியதோடு, வன்முறையை ஒடுக்கமுடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்லவேண்டியதுதானே எனவும் கூறியிருந்தார்.
**த.எழிலரசன்**�,