பாரத் நெட் டெண்டரில் முறைகேடுகளை விசாரிக்குமாறு அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் இணைய சேவை கிடைப்பதை உறுதி செய்யும் பாரத் நெட் திட்டத்துக்கான 1,950 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் தமிழக அரசால் விதிகள் திருத்தி வெளியிடப்பட்டது. 1950 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், எனவே இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டுமென்றும் முதன் முதலில் அறப்போர் இயக்கம் ஒன்றிய அரசுக்கு புகார் அளித்தது. இதையடுத்து ஒன்றிய வர்த்தக, தொழில் துறை அமைச்சகம் ஜூன் 26 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் 1950 கோடி ரூபாய் டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதுபற்றி மின்னம்பலத்தில் [ஊழல் டெண்டர் ரத்து, உதயகுமார் பதவிக்கு ஆபத்து?](https://minnambalam.com/politics/2020/06/27/57/barath-net-tender-cancelled-by-union-govt-rb-udhayakumar-minister-trouble) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் அந்தத் துறைக்கான அமைச்சர் உதயகுமார். “ஒன்றிய அரசின் பாரத் நெட் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. நிபந்தனைகளில் சில திருத்தம் மேற்கொள்ளப்படும். மறு ஒப்பந்தம் கோரப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும்” என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆனால் உதயகுமார் இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பின.
இந்நிலையில் இந்த விவகாரத்தின் முக்கிய அடுத்த நகர்வாக, இந்த முறைகேட்டை கண்டறிந்த அறப்போர் இயக்கத்தினரே உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்திருக்கிறார்கள்.
“அறப்போர் இயக்கத்தினரின் புகாரின் பெயரில் கடந்த மாதம் பாரத்நெட் டெண்டரை மத்திய அரசின் DPIIT துறை ரத்து செய்தது. டெண்டர் விதிகள் பாரபட்சமாகவும் போட்டிக்கு எதிரானதாகவும் உள்ளது என்று ரத்துக்கான காரணத்தையும் DPIIT குறிப்பிட்டு இருந்தது. எனவே முறைகேடு நிரூபணம் ஆனதால் இதில் ஈடுபட்ட அமைச்சர் உதயகுமார், ஹன்ஸ் ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ் , ரவிச்சந்திரன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோர் மீது ஊழல் கண்காணிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க கோரி இன்று புகார் அனுப்பியுள்ளோம்”என்று அறப்போர் இயக்க நிர்வாகிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
**-வேந்தன்**�,