கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மத உணர்வுகளைத் தூண்டும் ஆடைகளை அணியக் கூடாது என்று புதிய கட்டுப்பாட்டை கர்நாடக அரசு விதித்தது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகாவில் சமீப நாட்களாக சில கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் சில முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவிகளில் ஒரு சிலர் காவித் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் இருக்கும் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் (அ) பர்தா அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர் சிலர் காவி உடை அணிந்து வந்தனர்.
தற்போது உடுப்பியில் இருக்கும் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 இஸ்லாமிய மாணவிகள் கடந்த 3 வாரங்களாக கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதியிலிருந்து அவர்கள் கல்லூரிக்கு வரவில்லை என்று வகுப்புப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவிகள் கல்லூரி வாசலில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், கல்லூரியின் தலைமை ஆசிரியருடன் மாணவிகள் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ”சார் எங்களை உள்ளே விடுங்க. எங்க படிப்பு கெடுது. இத்தனை நாட்கள் நாங்கள் வந்தபோது பிரச்சனை இல்லையே!” என்று கேட்க, அதற்கு “ஹிஜாப்பை அகற்றினால்தான் கல்லூரிக்குள் அனுமதிப்போம்” என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
கல்லூரிகளில், பள்ளிகளில் ஆடைகள் குறித்து சில நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் பர்தா அணிந்து வருவதால் யாருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. வெறும் கண்கள் மட்டும் தெரியும் ஆடையை சில மாணவிகள் உடுத்தி வருவதனால் மத உணர்ச்சி எப்படித் தூண்டப்படும் என்று புரியவில்லை.
”முஸ்லிம் பெண்களின் உடையைக் காரணமாக சொல்லி, கல்வி உரிமை மறுக்கப்படுகிறது” என்று உடுப்பி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உடுப்பி கல்லூரி மாணவி ஒருவர், ஹிஜாப் அணிந்து வர அனுமதி கொடுக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு வரும் செவ்வாய்கிழமையன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
எதை உடுக்க வேண்டும், எதை உண்ண வேண்டும் என்பதையெல்லாம் கட்டுப்படுத்தும் வேலையில் பாஜக அரசு(கள்) அதிகாரப்பூர்வமாகவே இறங்கிவிட்ட நிலையில் இது எங்கே போய் முடியுமோ என்று சுதந்திர உணர்வாளர்களிடையே கவலை எழுந்துள்ளது.