தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மானிய கோரிக்கை விவாதத்துக்காகத் தொடங்கி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தொடரின் போது உறுப்பினர் கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகள் இருக்கிறது. இந்த பகுதியில் 3 கலை கல்லூரிகள் இருக்கின்றன. ஆலந்தூரிலிருந்து காஞ்சிபுரம் வரைக்கும் பெங்களூரு நெடுஞ்சாலையில் எந்த ஒரு கலைக் கல்லூரியும் கிடையாது. எனவே பூந்தமல்லியில் ஒரு கல்லூரி கட்டித் தரப்பட வேண்டும்” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “ மூன்று கல்லூரிகள் இருக்கக் கூடிய தொகுதியிலேயே இன்னொரு கல்லூரி வேண்டும் என்று உறுப்பினர் கேட்கிறார். ஆனால் ஒரு கல்லூரி கூட இல்லாத தொகுதியும் இருக்கிறது. இங்கெல்லாம் கல்லூரி கட்டித் தரப்பட வேண்டும் என்று அந்தந்த தொகுதி உறுப்பினர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள் இதை முதல்வரிடம் எடுத்துச்சொல்லி, அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
குறிப்பாக அரசு கலைக் கல்லூரிகளில் 3597 இடங்கள் உள்ளன. இதிலே 329 காலி இடங்கள் உள்ளது. இதுபோன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 36 இடங்கள் காலியாக இருக்கிறது. எனவே அரசு கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். 25% அதிகமாகவும் சீட் கொடுத்துச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். முதலில் கல்லூரி இல்லாத தொகுதிகளுக்குக் கல்லூரி கட்டித்தரப்படும் என்றார்.
**-பிரியா**