நிலக்கரி தட்டுப்பாடு: ஒரு யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி!

Published On:

| By admin

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஐந்து யூனிட்டுகளில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து மின் உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நாளொன்றுக்கு 1050 மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முக்கிய மூலப்பொருளான நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலக்கரி போதுமான அளவு கிடைக்காததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனல்மின் நிலையத்தில் இயங்கி வரும் ஐந்து யூனிட்டுகளும் இயங்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டது.
அவ்வப்போது வரும் நிலக்கரி மூலமாக சில நாட்களில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் தூத்துக்குடி மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலக்கரி தேவை பூர்த்தி செய்யப்பட்டு ஐந்து யூனிட்டுகளும் இயங்கி வந்த நிலையில் தற்போது மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி உள்ளது.
இதனால் ஐந்து யூனிட்டுகளில் ஒரு யூனிட் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நான்கு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு நீடித்தால் மொத்த யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்கிறார்கள் தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரிகள்.

**-ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share