நவீன இந்தியாவின் சிற்பியான பண்டித ஜவஹர்லால் நேருவின் 132 ஆவது பிறந்ததினம் இன்று நாடு முழுதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் இதுவரை இந்தியாவின் பிரதமர் பதவி வகித்த ஒவ்வொரு தலைவரின் பிறந்தநாளையும், நினைவுநாளையும் மைய மண்டபத்தில் அவர்களின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்துவது அரசு நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் மக்களவைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவரும் இதில் கண்டிப்பாக கலந்துகொள்வார்கள்.
ஆனால் தற்போதைய பாஜக ஆட்சியில் நேருவின் நினைவுகூறலில் இருந்து நழுவும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் முதல் பிரதமரான நேருவின் நினைவிடத்தில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வேறு எந்த அமைச்சர்களுமோ அஞ்சலி செலுத்தவில்லை. பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,’பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு புகழஞ்சலி’ என்ற வாக்கியத்தோடு முடித்துக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று நேருவின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அதையடுத்து நாடாளுமன்றத்தில் நேருவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் சோனியா கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மக்களவைத் தலைவரான ஓம் பிரகாஷ் பிர்லாவோ, மாநிலங்களவைத் தலைவரான துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவோ கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாநிலங்களவை காங்கிரஸ் கட்சி கொறடா ஜெய்ராம் ரமேஷ், “நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் உருவப்படங்களாக அலங்கரித்துக் கொண்டிருப்பவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும் பாரம்பரிய விழாவில் இன்று ஒரு அசாதாரண காட்சி. மக்களவை சபாநாயகர் வரவில்லை. ராஜ்யசபா தலைவர் வரவில்லை. ஒரு அமைச்சர் கூட வரவில்லை. இதைவிடக் கொடுமையாக இருக்க முடியுமா?!” என்று ட்விட் செய்துள்ளார்.
ரமேஷின் ட்வீட்டை டேக் செய்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையனும் அரசாங்கத்தை கடுமையாக தாக்கியிருக்கிறார்.
இது எனக்கு எதுவும் ஆச்சரியமாக இல்லை. இந்த ஆட்சியானது நாடாளுமன்றம் உட்பட இந்தியாவின் பெரிய நிறுவனங்களை ஒவ்வொரு நாளும் சிதைத்து வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
**-வேந்தன்**
�,”