மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசுக்கு எதிர்பார்த்தபடியே சிக்கல் வலுத்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சரும்,காங்கிரஸின் முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் தான் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி இன்று (மார்ச் 10) பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து தான் விலகுவதாக அறிக்கை வெளியிட, அதேநேரம் காங்கிரஸ் கட்சி அவரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பிரதமரை சந்தித்துக் கொண்டிருக்கும்போதே காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு தான் எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா.
அந்தக் கடிதத்தில், “நான் கடந்த 18 வருடமாக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக செயல்பட்டு வந்தேன். இப்போது நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே நான் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். எனது இந்தப் பாதை, கடந்த ஒருவருடமாக ஏற்பட்ட சம்பவங்களால் தன்னைத் தானே உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.
என் மாநில மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவையாற்றுவதுதான் என் குறிக்கோள். ஆனால் அதை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து என்னால் செய்ய இயலாது என்று நாம் நம்புகிறேன். என் மக்களின், என் ஆதரவாளர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய தொடக்கத்தை மேற்கொள்ள விரும்புகிறேன். இதுவரை எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா.
ஆனால் இதேநேரம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாக அவர் உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்நாத்துக்கும், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் இடையிலான பிணக்குகள் பல மாதங்களாகவே இருப்பது தெரிந்த நிலையில் , பாஜக தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவோடு பேசி முடித்தனர். எல்லா ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு ஜோதிர் சிந்தியாவின் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்.கள் பெங்களூருவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்ட பிறகு தன்னை சந்திக்க மார்ச் 10 ஆம் தேதி அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார் மோடி.
காரணம் இன்றுதான் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியாவின் பிறந்தநாள். மேலும் இன்று வட இந்தியாவின் புகழ்பெற்ற ஹோலி பண்டிகையும் கூட.
தந்தையின் பிறந்த நாளில் மகனை காங்கிரஸ் கட்சியில் இருந்து ’தூக்கி’ தன்னுடன் கொண்டுவந்துவிட்டார் மோடி. அடுத்தடுத்த அதிரடித் திருப்பங்களை எதிர்பார்த்து கதி கலங்கி நிற்கிறார் மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்.
**-வேந்தன்**�,”