சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாட்டிற்கு ‘நீட்’டை கொண்டு வந்து 13 மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைஞர் நகர் அரசு, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் இன்று(ஜூலை 19) ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முழு உடல் கவச உடையணிந்து கொரோனா பிரிவுகளுக்கு சென்று சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,”கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதோடு, 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் தயாராக உள்ளது.
சென்னையில் பெரிய மருத்துவமனைகளை தவிர்த்து 100 படுக்கைகள் கொண்ட பிரிவில் கலைஞர் நகர், அண்ணா நகர், பெரியார் நகர், தண்டையார் பேட்டை மருத்துவமனைகளில் 600 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட்டால் சிறிய மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை வழங்க போதுமான ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இஎஸ்ஐ மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு 7 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டது. சென்னை மற்றும் மதுரையில் தலா 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்கான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.
ராஜா முத்தையா உள்ளிட்ட இரண்டு மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக் கட்டணம் தொடர்பாக இருமுறை பேசப்பட்டுள்ளது. இரண்டு பல்கலைக்கழகங்களையும் இந்தாண்டு முதல் அரசே ஏற்று நடத்தும்.
கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் நினைக்க வேண்டாம். கொரோனா எனும் ஆபத்திலிருந்து இன்னும் நாம் மீளவே இல்லை. தினசரி பாதிப்பு இரண்டாயிரமாக உள்ளது. இது குறைவான எண்ணிக்கையும் அல்ல. மூன்றாவது அலை வரும் என்றும் மருத்துவர்களும், உலக சுகாதார அமைப்பு, ஐசிஎம்ஆர் ஆகியவை தொடர்ந்து எச்சரித்து வருகின்றது. அதனால், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அன்புகூர்ந்து கேட்கிறேன்.
தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மூன்றாவது அலை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்வருடன் ஆலோசனை செய்த பின் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார்” என்று தெரிவித்தார்.
நீட் விவகாரத்தில் மக்களை திமுக அரசு ஏமாற்றியது என்ற குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,” மக்களை ஏமாற்றியது யார்? இதுவரை யார் ஏமாற்றி கொண்டிருந்தார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். 2011 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு நீட் தேர்வை கொண்டு வந்தது. அப்பொழுது அரசு நிர்வாகத்தில் இருந்த காங்கிரஸூடன் தோழமை கட்சியாக திமுக இருந்தது உண்மைதான். ஆனாலும், அன்றைய முதல்வர் கருணாநிதி, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்று, 2011 மே மாதம்வரை நீட் தேர்வு தமிழ்நாட்டை எட்டி பார்க்கவிடவில்லை.
அடுத்த முதல்வராக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அம்மாவும்,2016 வரை நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிதான் சிவப்புக் கம்பளம் விரித்து நீட்டை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். அப்படி கொண்டுவரப்பட்ட நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட 13 மாணவர்கள் உயிரிழந்தனர். 7.5 விழுக்காடு மருத்துவ இட ஒதுக்கீடு கிடைக்க காரணம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக நடத்திய போராட்டம்தான்” என்று கூறினார்.
**-வினிதா**
�,