செஞ்சி அருகே தாயால் கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தையை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
செஞ்சி அருகே மணலப்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வடிவழகன் துளசி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். துளசிக்கு பிரேம்குமார் என்பவருடன் தொடர்பு இருந்த காரணத்தினால் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மீது இருக்கும் கோபத்தை இளைய மகன் பிரதீப் மீது காட்டியுள்ளார். ஒன்றரை வயதான குழந்தையை அடிக்கடி கொடூரமாக தாக்கி காயப்படுத்தி, அதை வீடியோவாகவும் தனது செல்போனில் வைத்திருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து வடிவழகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான தனிப்படையினர், துளசியை கைது செய்தனர். இதையடுத்து செஞ்சி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது குழந்தை தந்தை, பாட்டியுடன் நலமாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வடிவழகன் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் குழந்தையின் தந்தையிடம் 10,000 ரூபாய் நிதி வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “விழுப்புரம் மாவட்டம்-செஞ்சி அருகே மோட்டூர் கிராமத்தில் வடிவழகன் மனைவி துளசி அவரது மகன் பிரதீப் கொடூரமாக தாக்கியதை சமூக வலைத்தளம் மூலம் அறிந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். பெற்ற தாயே குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்து வைத்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சினிமா காட்சியில் கூட இந்த மாதிரி நிகழவில்லை. குழந்தைக்கு தேவையான மருத்துவ உதவிகளை அரசு செய்யும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,