எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம் என்று சோமேட்டோ நிறுவனம் தமிழில் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியுள்ளது.
இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தபடியே நமக்குப் பிடித்த ஹோட்டல் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். இந்த சேவையை சோமேட்டோ , ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. சேவையை வழங்கும் நிறுவனங்கள், சில நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு சங்கடத்தையும் கொடுக்கிறது. சோமேட்டோ நிறுவனம் சர்ச்சைக்குள்ளாவது முதல் முறை கிடையாது. ஏற்கனவே டெலிவரி பாய் ஒருவர் நுகர்வோருக்கு கொடுக்கவேண்டிய உணவை சாப்பிட்டது, பெண் நுகர்வோரை பெங்களூருவில் சோமேட்டோ ஊழியர் தாக்கியது என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஸ் என்பவர் சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதில் ஒரு ஆர்டர் மிஸ் ஆகியுள்ளது. இதுகுறித்து அவர் கஸ்டமர்கேரில் மெசேஜ் மூலம் கேட்டதற்கு , பணம் திரும்ப கிடைக்காது என்று கூறியதுடன், இந்தியில் பேசுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்தி தனக்கு தெரியாது என்று விகாஸ் கூறியதால் , தேசிய மொழியான இந்தியை தெரிந்து கொள்ளாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு விகாஸ், நீங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கினால் தமிழ் தெரிந்த ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டும். தமிழில் பேசும் அதிகாரியிடம் கனெக்ட் செய்யும்படி கூறியுள்ளார், அதற்கு அந்த ஊழியர் மறுத்துள்ளார்.
இதை வாடிக்கையாளர் விகாஸ் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், சோமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக #Reject_Zomato, #ZomatoSpeakTamil உள்ளிட்ட ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்விட்டரில் டிரெண்டானது.
இதுகுறித்து திமுக எம்.பி., கனிமொழி தனது ட்விட்டரில்,” குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் ட்விட்டரில்,” எப்போதிலிருந்து இந்தி இந்தியாவின் தேசிய மொழியானது? தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நுகர்வோர் ஏன் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? எதன் அடிப்படையில் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் சோமேட்டோ ஊழியர் அறிவுரை செய்துள்ளார். வாடிக்கையாளரின் பிரச்சினையை நிவர்த்தி செய்து, மன்னிப்பு கேளுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
இப்படி தொடர்ந்து சோமேட்டோ நிறுவனத்துக்கு எதிராக கண்டனங்கள் வலுத்த நிலையில், பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்துள்ளன.
இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளது சோமேட்டோ நிறுவனம்.
சோமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வணக்கம் தமிழ்நாடு, எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம் . பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிர கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.
இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர் மயமாக்கி உள்ளோம். எடுத்துக்காட்டாக நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம். மேலும் கோயமுத்தூர் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்டர், சர்வீஸ் சென்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம். உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,”