தூத்துக்குடியில் மழை வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 2) மதியம் அங்கு சென்றுள்ளார்.
பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் பார்வையிடுகிறார். பின்னர் எட்டையபுரம் மதுரை சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.
அதன்பிறகு, முத்தமிழ் குடியிருப்பு, ரக்மத் நகர், எட்டையபுரம் – மதுரை சாலை ஏவிஎம் அரங்கம் எதிரில் வெள்ள பாதிப்பைப் பார்வையிடுகிறார். நிலா கடல் உணவுகள் அருகில் நீரகற்றும் பாதைப் பணிகளை ஆய்வுசெய்கிறார்.
முதலமைச்சரின் இன்றைய வருகைக்கு முன்னதாக, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவன் நேற்று வெள்ள பாதிப்புப் பகுதிகளில் நிலவரத்தைப் பார்வையிடச் சென்றார்.
முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர், ராம்நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர் உள்பட தூத்துக்குடி மாநகராட்சியின் பல பகுதிகளில் ஒரு வாரமாக மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ள நீரை அகற்ற அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பகுதிவாசிகள் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளனர்.
முதலமைச்சரின் விசிட்டுக்கு முன்னால் அமைச்சர் நேற்று அந்தப் பகுதிகளுக்கு விசிட் அடித்தபோது, மக்களின் அதிருப்தியை நேரடியாக எதிர்கொண்டார்.
திருச்செந்தூர் சாலையில் அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி எதிரில், சிவந்தாகுளம் பகுதியில் ஒரு வாரமாகத் தேங்கியிருக்கும் வெள்ளத்தை அதிகாரியோ அரசியல்வாதியோ ஒருவர்கூட வந்து எட்டிப்பார்க்கவே இல்லை என மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அமைச்சரின் வருகையின்போது தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து, கவனத்தை ஈர்ப்பதற்காகவே அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மறியல் நடைபெற்ற இடத்துக்கு சிறிது தொலைவுக்கு முன்னரே அமைச்சரின் கார் நின்றுவிட்டது. மறியலில் ஈடுபட்டவர்களில் இளைஞர்களோ ‘ஆம்புலன்சுக்கு மட்டும் வழியவிடு.. அப்படியே உக்கார்…கலையாதே’ என பிடிவாதமாக நின்றனர்.
சிறிது நேரம் அதே இடத்தில் நின்ற அமைச்சரின் கார், பின்னர் வந்தவழியாகப் பின்வாங்கிச் சென்றது. அமைச்சரின் வாகன வரிசையில் வந்த மூன்று கார்களும் யூடர்ன் அடித்து திரும்பின. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த நிகழ்வு தொடர்பான காணொலியானது, இணையதளம், சமூக ஊடகங்கள் மூலம் அதிவேகமாகப் பரவிவருகிறது.
**-கதிரவன்**
�,”