பெண்களுக்கு ரூ.1,000 கட்டாயம் வழங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

politics

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, கட்டாயம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஆய்வுக் கூட்டம் நேற்று (ஜூலை 22) பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ஊராட்சி, ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2,000 கிலோமீட்டர் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

நில எடுப்புப்பணிகள் காரணமாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நில எடுப்புப்பணியை விரைவுபடுத்த ஐந்து மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உத்தரவின்படி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலை ஓரங்களில் மரங்கள் நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பழனி – கொடைக்கானல் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் – மூணாறு இடையே சாலை அமைக்க கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழர்களின் அடையாளமாக விளங்கும் கீழடியில் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கே செல்வதற்கு சாலை வசதி இல்லை என்பதால், விரைவில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் புறவழிச் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் பாலம் கட்டப்படவில்லை. மதுரையில் புதிதாக மூன்று புதிய பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நூலக இடம் தேர்வு குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு, அவர் அனுமதி அளித்ததுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒற்றை முறை டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் ஐந்தாண்டுக் காலம் ஆட்சிபுரிய மக்கள் அனைவரும் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் காலக்கட்டத்துக்குள் நிதிநிலை உள்பட அனைத்து துறைகளையும் சீராக்குவோம். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறோம். அதனால், சொல்வதைதான் செய்வோம், செய்வதைதான் சொல்வோம்; ஆனால் கட்டாயம் செய்வோம். கட்டாயம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *