வீடு இடிந்ததில் 17 குடும்பங்களுக்கு மாற்றுவீடுகள்; அறிக்கை தாமதம்!

Published On:

| By Balaji

சென்னை திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் ஒரு அடுக்குமாடி இடிந்து விழுந்ததில் 28 வீடுகள் தரைமட்டம் ஆகின. அதில் குடியிருந்த 17 குடும்பங்களுக்கு இன்று மாற்று வீடுகள் வழங்கப்பட்டன.

திருவொற்றியூர், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்று 17 குடும்பங்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசன் இதற்கான ஆணைகளை வழங்கினார்.

முன்னதாக, திருவொற்றியூர், அரிவாக்குளம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கடந்த மாதம் 27ஆம் தேதி காலையில் திடீரென இடிந்துவிழுந்தது. நல்வாய்ப்பாக முன்னெச்சரிக்கையாக அங்கிருந்தவர்கள் வெளியேறிவிட்டதால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட 28 குடும்பங்களுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு இலட்சம் ரூபாய் நிவாரணமும் உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டன. மாற்று வீடுகளும் உடனடியாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதையடுத்து, வீடிழந்து பாதிக்கப்பட்டவர்களில் 17 குடும்பங்களுக்கு இன்று மாற்று

வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

பதினேழு குடும்பங்களில் 9 குடும்பங்களுக்கு ஆல் இந்தியா ரேடிகோ எர்ணாவூர் திட்டப் பகுதியிலும், 8 குடும்பங்களுக்கு என்.டி.ஓ. குப்பம் திட்டப் பகுதியிலும் மாற்று வீடுகள் வழங்கப்பட்டன.

மற்ற 11 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதுவரை குடியிருந்த பகுதியிலேயே புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் தங்களுக்கு இடம் ஒதுக்குமாறு எழுதிக்கொடுத்தனர் என்றும் அவர்களுக்கு அங்கு வீடுகள் கட்டப்படும்வரை வெளியே வாடகைக்கு இருக்கும் காலத்துக்கு அரசு தரும் கருணைத்தொகையான 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

மேலும், அரசு நியமித்துள்ள மதிப்பீட்டுக் குழு அறிக்கை வந்ததும், இதே திட்டப்பகுதியில் மீதமுள்ள 308 வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் காலிசெய்தவுடன் அதே பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு, இப்போதைய குடியிருப்புதாரர்களுக்கே வீடுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், கே.பி.சங்கர், வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கோவிந்தராவ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அடுக்கு வீடுகளின் உறுதித்தன்மையைப் பற்றி ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு, கடந்த டிச.31ஆம் தேதி தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி அந்த அறிக்கை இன்னும் இறுதியாகவில்லை. அமைச்சரும் அதையொட்டி பேசியுள்ளார்.

வாரிய வட்டாரங்களில் இதுகுறித்துக் கேட்டபோது, அடுத்த வாரத்தில் மதிப்பீட்டுக் குழு அறிக்கை தயாராகிவிடும் என்று தெரிவித்தனர். அதன் பிறகே, இந்தக் குடியிருப்பு தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

**-முருகு**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share