மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக குஷ்பு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸிலிருந்து விலகி நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட நடிகை குஷ்பு இன்று (அக்டோபர் 13) தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். ஆளுயர மாலையும் குஷ்புவுக்கு அணிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, நான் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்தேன் என்பதை யோசிக்கக்கூட முடியாத மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என சாடினார். மேலும், ஆறு வருடமாக கட்சியில் இருந்த பின் தான் நடிகை என அவர்களுக்கு தெரிகிறது எனவும், கட்சியில் இருப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்றும் கூறிய அவர், ஆறு வருடங்கள் தன்னுடைய உழைப்பு வீணாகிவிட்டதாக சாடினார்.
இந்த நிலையில் மூளை வளர்ச்சி இல்லாத என்று குஷ்பு பயன்படுத்திய வார்த்தை தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்காக செயல்படும் டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் தீபக் நாதன், “மூளை வளர்ச்சியின்மை தன்மையை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளதை டிசம்பர் 3 இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறக்கும் 69 குழந்தைகளில் ஒரு குழந்தை மூளைவளர்ச்சி குறைவாக இருப்பது இயற்கை அப்படி பிறக்கும் குழந்தைகள் எந்த வகையில் சிறுமை? இயலாமை இயற்கையின் அங்கம் அவ்வளவே என்று கூறியுள்ள அவர், “இயலாமை இடித்து அரசியல் எதிரியை விமர்சிப்பது முறையா? இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மாற்றுதிறனாளிகளை அரசியல்வாதிகள் இழிவுபடுத்தி வருவதாகவும், குஷ்பு தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் தீபக் வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**�,