�
மத்தியப் பிரதேச முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்த பாதிப்பு 13 லட்சத்தைக் கடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை கொரோனாவால் மொத்தமாக 26,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,553 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17,866 பேர் குணமடைந்துள்ளனர். 791 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர், “நான் கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வருகிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்திக் கொண்டேன். காணொளிக் காட்சி மூலம் தினசரி கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த சகாக்கள் உட்பட அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
**-கவிபிரியா**�,