ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் விருப்பம்!

politics

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் போதாது, உயர் கல்வியில், ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம், மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியின் சமூக மேம்பாட்டுக்கான புத்தாக்கத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மீனாட்சி சுந்தரராஜன் கல்லூரி மற்றும் கல்விக் குழுமத்தின் சிறப்புகள் மற்றும் பெருமைகள் குறித்து பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அப்போது, இந்திய அளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் பொறியியல் கல்லூரிகள் இருந்தன. இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்டு, பலருக்கும் ஆரம்பக் கல்விக் கூட கிடைக்காத காலகட்டமாக இருந்திருக்கிறது. மாபெரும் சமூகப் புரட்சியாளர்கள் எளிய மக்களுக்கான கல்விக் கதவுகளைத் திறந்து கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில், உயர்கல்வி பெற வாய்ப்புக் கிடைத்த சிலருக்குக் கூட பொறியியல் பட்டப்படிப்பு என்பது வெறும் கனவாகத்தான் இருந்திருக்கிறது. அந்தச் சூழலில்தான் பொறியியல் படிக்க விரும்பக் கூடியவர்கள், அந்தப் படிப்பில் பட்டம் பெற வழிவகை செய்யக்கூடிய நோக்கத்தோடு, இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது.
பொறியியல் கல்வி எளிதாகக் கிடைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்துக்காகத்தான் இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதே நோக்கத்தோடுதான், மாணவர்கள் பொறியியல் கல்லூரியைப் பெறுவதற்கு இடராக இருந்த நுழைவுத் தேர்வை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நீக்கினார் என்பதும் வரலாறு. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
அதனால், இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பொறியாளர் இருக்கிறார் என்று சொல்கிற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. பொறியியல் மட்டும் அல்ல, அனைத்துப் படிப்புகளும் நமது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இப்போது இருக்கக்கூடிய எனது அரசு என்று சொல்ல மாட்டேன், நமது அரசினுடைய நிலைப்பாடும். அதனால்தான், தற்போது நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நாம் எப்படியெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று பேசினார்.
மேலும், “மாணவர்கள்தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து. எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கான கல்விக் கதவுகள் மூடப்படக் கூடாது. தமிழ்நாட்டில்தான் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தி அதிகம். இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவைதான் என்பது பெருமைப்படக்கூடிய ஒன்று.
பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உலக ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருப்பது போல எந்த மாநிலத்திலும் கிடையாது, அதுவும் தமிழ்நாட்டுக்குத்தான் பெருமை.
தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உயர் பொறுப்புகளில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் உயர் கல்வியால் உயர்ந்தார்கள், உயர்ந்த நிலைக்குச் சென்றவர்கள், அந்த நிலையை இன்னும் கூடுதலாக நாம் உயர்த்த வேண்டும்.
மாணவர்கள் கல்வி கற்கும் பருவத்திலேயே சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிந்து அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்குவதற்கு சமூக மேம்பாட்டுக்கான புத்தாக்கம் என்ற திட்டம் உதவும். கருணாநிதி, மாணவர்களின் இந்தக் கண்டுபிடிப்பைப் பார்த்திருந்தால் வாழ்த்தி இருப்பார், கருணாநிதிதான் நாட்டில் முதன்முறை மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை உருவாக்கினார், மாற்றுத்திறனாளிகள் துறையைக் கருணாநிதி போல, நானும் எனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டமும் அவசியம்” என்று கூறினார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *