சென்னை கண்ணகி நகரில் திடீரென அரசு பேருந்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆறாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் 1600க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்பார்வையிட்டார். பின்பு தன்னுடைய வாகனத்தில் ஓஎம்ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்தை நிறுத்த சொன்ன முதல்வர், வாகனத்திலிருந்து இறங்கி அங்கே நின்று கொண்டிருந்த M19B தியாகராய நகர் – கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் எறினார். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் எல்லாரும் பேருந்து அருகே ஓடி வந்தனர்.
பின்பக்க வாசல் வழியாக முதல்வர் பேருந்துக்குள் ஏறியதும், அங்கிருந்த மக்கள் எல்லாரும் பரவசமடைந்தனர். பேருந்தில் குறுகிய இடம் மட்டுமே இருந்தாலும் முதல்வரை நெருக்காமலும், இடிக்காமலும் பொதுமக்கள் பேசினர். பெண் பயணிகளிடம் இலவச பேருந்து திட்டம் எப்படி இருக்கிறது? இத்திட்டம் வருவதற்கும் முன்பும், பின்பும் பயண செலவு குறைந்துள்ளதா? போதுமான வசதி உள்ளதா? கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா? என்று கேட்டு கொண்டே முன்னே சென்ற முதல்வரிடம், பெண் ஒருவர், சார் ஒரு செஃல்பி என்று கேட்டார். அவரும் எடுத்துக்கோங்க என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு நகர்ந்தவரிடம், எதிர்பாராத விதமாக பெண் ஒருவர் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அந்த பெண்ணை வாழ்த்திவிட்டு அப்படியே முன்பக்க வாசல் வழியாக இறங்கி, தன்னுடைய காரில் ஏறி சென்றார் முதல்வர்.
தி. நகர் – கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டு, பெண்களிடம் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து கேட்டறிந்தார். pic.twitter.com/QbKwZKpB3i
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 23, 2021
திடீரென முதல்வர் பேருந்தில் ஆய்வு மேற்கொண்ட சம்பவம், பயணிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
**-வினிதா**
�,”