Gமுதல்வர் – விஜய் சந்திப்பு!

Published On:

| By admin

முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் வெற்றிக்கு பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘விஜய் 66’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட விஜய் பின்னர், சென்னையில் நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலினும் அங்கு வருகை தந்தார்.

நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிப்பதற்காக மேடைக்கு வந்தபோது முதல்வர் ஸ்டாலினும் திருமண அரங்குக்குள் வந்தார். மேடையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் ஒரு நிமிடம் சந்தித்து பரஸ்பரம் கைகொடுத்து நலம் விசாரித்துக்கொண்டனர்.
முதல்வர் – விஜய் சந்திப்பைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் கை தட்டி வரவேற்றனர். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். முதல்வர் விஜய் சந்திப்புத் தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share