தமிழகத்தை உலகமே உற்றுநோக்கும்: முதல்வர்!

politics

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதற்கு உரிய நேரத்தில் எடுத்த முயற்சியே காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஜூன் 28) காலை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்தில் நாங்கள் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். இது அனைவருக்குமான வளர்ச்சி. அனைத்து துறைகளின் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி, அனைத்து சமூகத்தின் வளர்ச்சி என்ற அடிப்படையில் திராவிட மாடலை வடிவமைத்து இருக்கிறோம்.

வளர்ச்சி என்றால் சிலர் தொழில் வளர்ச்சியை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் வளர்ச்சி என்பதற்கு டெவலப்மென்ட் என்பதைத் தாண்டி விரிவான பொருளும் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் மேம்பட்டு விளங்க முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.

அதில் முக்கியமானது தான் விளையாட்டு துறை. இந்தத் துறையிலும் தமிழ்நாடு முன்னோக்கிய பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது.

வரும் ஜூலை 28 அன்று 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இது நமக்கு எல்லாம் கிடைத்து இருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை. 200 நாடுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க கூடிய திருவிழா முதன்முறையாகச் சென்னையில் நடைபெறுகிறது. 2022ஆம் ஆண்டுக்கான போட்டியை ரஷ்யாவில் நடத்துவதைக் கைவிடுவதாகச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இந்த போட்டியை தங்கள் நாடுகளில் நடத்துவதற்குப் பல நாடுகள் முயற்சி மேற்கொண்டன.

இந்தியாவில் இந்த போட்டியை நடத்த நாமும் முயற்சி மேற்கொண்டோம். அப்போது நம்முடைய அரசு உரிய நேரத்தில் உரிய முயற்சியை மேற்கொண்டதால் இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவில் செஸ் போட்டி நடப்பது முதல் முறை என்பதையும் தாண்டி அந்த முதல்முறையாகத் தமிழ்நாட்டில் நடப்பது தான் நமக்கெல்லாம் மகிழ்ச்சி.

விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் என 2500 பேர் தமிழகம் வர இருக்கிறார்கள். இதனால் சர்வதேச அளவில் தமிழகம் உற்று நோக்கக்கூடிய ஒரு மாநிலமாக மாறப்போகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதன் மூலமாக தமிழக அரசு பெருமையடைகிறது. இந்தப் போட்டியை நடத்துவதற்கு மாநில அரசு 92.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோவை சில வாரங்களுக்கு முன்பு நான் வெளியிட்டேன். இத்தகைய செஸ் ஒலிம்பியாட் கவுன்டவுன் தொடங்கப்பட்ட நேரத்தில் இந்த மாநாடு நடப்பது நமக்கு மிகவும் சரியானது.

நானும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவன். கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதைத் தவற விட மாட்டேன். மேயர் ஆன போதும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறேன். எத்தகைய பணிச் சூழல் இருந்தாலும் கலைஞரும் தவறாமல் கிரிக்கெட் பார்த்துவிடுவார். விளையாட்டுப் போட்டி என்பது விளையாடுபவர்களை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *