தமிழ்நாட்டு மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன், உழைத்து கொண்டே இருப்பேன் என்று சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இன்று(டிசம்பர் 11) நடைபெற்ற அரசு விழாவில், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 38 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், 54 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 30,837 பயனாளிகளுக்கு 168 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,” சேலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது என்ன அரசு விழாவா அல்லது அரசாங்கமே விழாக்கோலம் கொண்டிருக்கிறதா என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று பெருமிதம் அடைந்தவர், சேலத்தின் வரலாற்றையும், அதன் அடையாளமாக விளங்கக் கூடியவர்கள் பற்றியும் பேசினார்.
”நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் சில ஆண்டு காலம் வாழ்ந்த ஊர்தான் இந்த சேலம். 1949-50ஆம் ஆண்டுகளில் அந்த காலக்கட்டத்தில் சேலம் கோட்டைப் பகுதியில் ஹபீப் தெருவில்தான் தலைவர் கலைஞர் வாழ்ந்து வந்தார். அந்த அடிப்படையில் பார்த்தால் நான் என்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிறேன், அதுதான் எனக்குப் பெருமை. இருந்தாலும் நான் முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய இந்த நேரத்தில் நம் வீரபாண்டியார் அண்ணன் இல்லையே என்கின்ற வருத்தம், ஏக்கம் என்னுடைய உள்ளத்தில் பதிந்திருக்கிறது” என்று கூறினார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது உருக்காலை, ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம்சேலத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, ஆத்தூரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட ஏராளனமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக கூறிய முதல்வர், அத்தனை திட்டங்களையும் பட்டியலிட்டு பேசினார்.
இதுவரை சேலம் மாவட்டத்தில் மக்கள் கொடுத்த மனுக்களுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. ஆனால் உறுதியோடு சொல்கிறேன், அவற்றில் எதை, எதை நிறைவேற்றப்பட முடியுமோ அத்தனையும் உறுதியாக, நிச்சயமாக நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தார்.
முதலமைச்சராக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, எங்கு சென்றாலும் மக்கள் எங்களுக்கு மகிழ்ச்சியோடு வரவேற்பு தருகிறார்கள். அவர்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது, அவர்கள் புன்னகையைப் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு தெம்பு வருகிறது. ஏற்கனவே ஒரு ஆட்சி நடந்தது, நான் அரசியலை அதிகம் பேச விரும்பவில்லை, பேசவும் தேவை இல்லை, அது எனக்கு அவசியமும் கிடையாது என்று கூறினார்.
சேலம் மாவட்டத்திற்கு இன்றைக்கு மட்டும் 1,242 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், ”சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் 530 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். 158 கோடி ரூபாய் செலவில் கூடுதல் குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக 20 கோடி செலவில் ரூபாய் மாவட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்படும். கருப்பூரில் டைடல் மென்பொருள் தொழில் பூங்கா ஒன்று விரைவில் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சமச்சீரான வளர்ச்சி என்பதுதான். இந்தத் தொழில் அந்தத் தொழில் என்ற எண்ணம் கிடையாது. இந்த மாவட்டம் அந்த மாவட்டம் என்ற பாகுபாடோ கிடையாது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமச்சீர் வளர்ச்சி வரவேண்டுமென்றால், சம உரிமை கொடுக்கக்கூடிய வகையில் திட்டங்களை உருவாக்கித் தரவேண்டும். அந்த வகையில், அனைத்து மாவட்டங்களுக்கும் இது போன்ற ஏராளமான திட்டப்பணிகளை தீட்டி நாங்கள் தொடங்கி வைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஓய்வை நான் என்றைக்கும் விரும்பியது கிடையாது. கலைஞர் சொன்னதுபோல உழைப்பு, உழைப்பு, உழைப்பு. உங்களுக்காக தொடர்ந்து உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன்” என்று கூறி உரையை முடித்தார்.
**-வினிதா**
�,