சென்னையில் உள்ள லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் கட்டப்பட்ட லிபா என்ற கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ கலைஞருக்கும் இந்த லயோலா கல்லூரிக்கும் ஒரு பெரிய தொடர்பே உண்டு.
ஏனென்றால், தலைவர் கலைஞருடைய குடும்பத்திலிருந்து என்னுடைய அண்ணன் அழகிரி, முரசொலி மாறன் மூத்த மகன் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்தக் கல்லூரியில்தான் படித்திருக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் நான் படிக்காமல் போய்விட்டேனே என்ற ஏக்கம் இப்போது எனக்கு வந்திருக்கிறது. ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கல்லூரி, இருக்கும் என்று சொன்னால், அது லயோலா கல்லூரியாகத்தான் இருக்கமுடியும்.
ஒவ்வொரு முறையும் நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்த லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணப்பட்டு, அங்கிருந்துதான் அறிவிப்பு வந்தது. இப்போது நான் முதலமைச்சராக இருக்கிறேனென்றால், இந்த கல்லூரியில்தான் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன்மூலமாக அந்த செய்தி வெளியில் வந்து அதற்குப் பிறகுதான் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். அதனால்தான் சொன்னேன், என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் எத்தனையோ இருந்தாலும், இந்தக் கல்லூரியை நிச்சயமாக மறக்கமுடியாது.
தன் பெண்டு –
தன் பிள்ளை –
சோறு –
வீடு –
சம்பாத்தியம் – ஆகிய இவையுண்டு – தானுண்டு என்று வாழக்கூடாது என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். ஒருவரது கல்வி, அவருக்கு மட்டுமல்லாமல், அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நாட்டுக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கல்வியாக இருந்திட முடியும்.
கல்வியுடன் சேர்ந்து சமூக அக்கறையையும் ஊட்டும் கல்வியாக அதனைப் புகட்ட வேண்டும். அப்படிப் புகட்டும் நிறுவனமாக லயோலா போன்ற நிறுவனங்கள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன” என்றார்.
மேலும் அவர், “ கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய, சிறுபான்மையின மக்களுக்கும், பட்டியலினக் குடும்பங்களிலிருந்து வரக்கூடிய பயில்கிற மாணவர்களுக்கும் நிதியுதவி அளித்து, அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி லயோலா வளாகத்தில் உள்ள இந்த லிபா நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதே சிந்தனையோட்டத்தில் செயல்படும் லிபா நிறுவனம் இப்போது ஒரு புதிய கட்டடத்தைக் கட்டி எழுப்பியிருப்பது, இதனை வெறும் கட்டடமாக நான் பார்க்கவில்லை. ஏழை எளிய, சிறுபான்மையின, பட்டியலின மக்களின் கலங்கரை விளக்காக நான் பார்க்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு இந்த ஒளி கிடைத்தாக வேண்டும்.
இந்த நிறுவனத்தை நடத்திவரக்கூடிய இயக்குநர் அருட்தந்தை ஜோ அருண் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாட்டில் பல மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இயக்குநராகப் பணிபுரிந்து அந்த அனுபவத்தையும் அவர் பெற்றிருக்கிறார்.
லிபா நிறுவனத்தை உலகளவில் சிறந்த நிறுவனமாக உயர்த்திட வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டடத்தை உருவாக்கியுள்ளார். அவரது கனவு நனவாக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்ததே கல்லூரிகளில்தான். அதனால்தான், கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகமான கல்லூரிகளை உருவாக்கியிருக்கிறோம், இப்போதும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பெருந்தலைவர் காமராசர் அவர்களது காலத்தில் பள்ளிகள் அதிகம் உருவாக்கப்பட்டது.
தலைவர் கலைஞர் அவர்களது காலத்தில் கல்லூரிகள் அதிகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி அதிகமாக பல்கிப் பெருக வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு அரசு இந்த இலக்கை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை நாம் எளிதாக அடைந்துவிட்டோம். அனைவருக்கும் ஏதாவது ஒரு பட்டம் என்ற இலக்கையும் விரைவில் அடைந்துவிடுவோம். அனைவரும் உயர்கல்வி கற்றவர்களாக வளர வேண்டும்; வாழவேண்டும். அந்த இலக்கை எட்டிய முதல் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர வேண்டும். அதற்கு லயோலா போன்ற நிறுவனங்களும் தங்களது அறிவுப் பணியைத் தொடர வேண்டும்.
புதிய புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும். அதனை நோக்கி மாணவர்களை ஈர்க்க வேண்டும். அத்தகைய பட்டம் பெற்றவர்கள், உலகம் முழுவதும் உள்ள தொழில்களை, வேலைவாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டும். தமிழர்கள் தங்களது அறிவால் – திறமையால் – கல்வியால் – வேலைவாய்ப்பால் உலகளாவிய பெருமையை அடைய வேண்டும். அதற்கு லயோலா போன்ற கல்வி நிறுவனங்கள் உறுதுணையாக நிற்க வேண்டும். தொழில்முனைவோர்களை உருவாக்குகிற இதுபோன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்கள் நமது நாட்டில் பெருகிட வேண்டும்” என்றார்.
**-பிரியா**
�,