கர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 10) ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திமுக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல. தமிழர்களுக்கான உரிமையை மீட்பதற்காக, தமிழ்மொழியை காப்பதற்காக, தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக திமுக போராடி வருகிறது.
திமுக ஆட்சி இதுவரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய ஆட்சியாக இருந்தது. இனியும் அப்படிதான் இருக்கும். தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற நிலை உருவாக்குவோம். நான் நிரந்தர முதல்வராக வேண்டும் என்பதற்காகவோ, சிலர் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல. திமுக தமிழர்களின் உணர்வோடு உருவான இயக்கம் என்பதற்காகத்தான். திமுகதான் இந்த மண்ணின் மணத்தோடு, குணத்தோடு, நிறத்தோடு, உணர்வோடு உருவான இயக்கம். தமிழக மக்களின் தேவையறிந்து செயல்படுவது திமுகதான். தமிழக மக்களுக்கும், திமுகவுக்கும் இருப்பது ஒரு ரத்த பந்தம். இதை யாராலும் பிரிக்க முடியாது.
ஈரோட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலமாக 12,825 பேர் பல்வேறு பொறுப்புகளில் உட்கார இருக்கிறார்கள். இந்தப் பதவிகளில் திமுக வேட்பாளர்கள், நமது கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தி எனக்கு வந்தாக வேண்டும்.
நான் சுயநலமாகச் சிந்திக்கிறேன், பேராசைப்படுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். நாம் பொதுமக்களின் நன்மைக்காகத்தான் இதைச் சொல்கிறேன். திமுக நல்ல பல திட்டங்களைத் தீட்டி இருக்கிறது. இனியும் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவரப் போகிறது. இந்த நன்மைகள் முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டுமானால் அதற்கு உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் திமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சியினராக இருந்தால்தான் அது முறையாக சிறப்பாகச் சென்றடைய எளிதாக இருக்கும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிசாமி, தனது அவல ஆட்சியின் தோல்வியை மறைக்க, தானும் தனது அமைச்சர்கள் செய்த ஊழல்களை மறைக்க தினம் ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இவரது பொய் சொல்லும் குணத்தைப் பார்த்து மக்கள் இவரை பச்சைப்பொய் பழனிசாமி வருகிறார் என்றுதான் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். பொய் சொல்வதில் டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு மக்களை ஏமாற்றியவர்தான் இந்தப் பச்சைப்பொய் பழனிசாமி.
ஆட்சியில் இருந்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றிப் பொய் சொன்னார். நீட் மசோதா பற்றிப் பொய் சொன்னார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றிப் பொய் சொன்னார். அண்ணா என்னை விட்டுடுங்க என்று அப்பாவிப் பெண் ஒருவர் கதறும் அளவுக்கு அந்த சம்பவத்தைக் கேட்டு நாம் அனைவரும் துடித்துப் போனோம். ஆனால் நெஞ்சில் துளி ஈரமும் இரக்கமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு பொய் சொன்னது யார்? அந்தப் பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றியது யார்? பச்சைப்பொய் பழனிசாமிதானே? எல்லாவற்றுக்கும் மேல், கொடநாடு கொலை கொள்ளை வழக்கிலேயே பொய் சொன்ன நவீன கோயபல்ஸ்தான் பச்சைப்பொய் பழனிசாமி. அதுபோன்று நீட் தேர்வு விவகாரத்திலும் காங்கிரஸும் திமுகவும் சேர்ந்துதான் நீட் தேர்வையே கொண்டு வந்தார்கள் என்று கூசாமல் பொய் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. நீட் தேர்வு, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே அமலுக்கு வந்தது. நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தார். அதை மறுக்கவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகே தமிழகத்தில் அமலுக்கு வந்தது” என்று விமர்சித்த முதல்வர்,
“பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கம்பெனி சீரழித்துவிட்டுப் போன நிதிநிலையை நாம் இப்போது சரி செய்துகொண்டு இருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதம் இருக்கும் வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றப் போகிறோம். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், சொன்னதையெல்லாம் பத்தாண்டுக் கால அவல ஆட்சியில் நிறைவேற்றினார்களா?
எல்லோருக்கும் செல்போன் கொடுப்பதாகச் சொன்னார்கள். தமிழ்நாட்டில் எவர் ஒருவருக்காவது செல்போன் கிடைத்ததா? இலவசமாக அம்மா மினரல் வாட்டர் கொடுத்தார்களா? கைத்தறித் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் கொடுத்தார்களா? எதையாவது செய்தார்களா? ஒரு திட்டத்தை எப்படித் தீட்டுவது, எப்படி உருவாக்குவது என்பதே தெரியாத அதிமுகவின் கையில் அன்று ஆட்சி இருந்தது.
அதிமுக ஆட்சியானது தமிழ்நாட்டில் கொள்ளை அடித்தது. டெல்லிக்குத் தலையாட்டியது. அதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய ரெய்டுகளின் மூலமாக அவர்களின் லட்சணம் வெளிச்சத்துக்கு வரவில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்ற ரெய்டு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, ஆவணங்கள் குறித்த விவரங்களைப் பட்டியலிட்டார்.
இவர்களின் கையில்தான் கோட்டையும் ஆட்சியும் இருந்தது. எண்ணற்ற முறைகேடுகளும் நடந்தன. இந்தக் கும்பலிடம் உள்ளாட்சி அமைப்புகளைக் கொடுத்துவிடாதீர்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். வெற்றி விழாவில் நிச்சயம் உங்களைச் சந்திக்க நான் வருவேன்” என்று கூறி உரையை முடித்தார்.
**-வினிதா**
அதிமுக தமிழ்நாட்டை கொள்ளை அடித்தது: முதல்வர் ஸ்டாலின்
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel