காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாயையும், சேயையும் மீட்ட இளைஞர்களை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் கடந்த ஞாயிறு அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கைக்குழந்தையுடன் ஒரு தாய் உட்பட 4 இளைஞர்கள் மறுகரையில் சிக்கிக்கொண்டனர்.
இதில் அந்த இளைஞர்கள், தாங்கள் முதலில் கரை ஏறாமல், அந்த குழந்தையையும், தாயையும் தங்கள் உயிரைப் பணையம் வைத்து மீட்டனர். இந்த பணியின் போது இரு இளைஞர்கள் பாறையின் மேல் இருந்து வழுக்கி விழுந்து காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன ஆனது என அங்கிருந்தவர்கள் கவலையுடனும், பதற்றத்துடனும் இருந்த நிலையில் இரு இளைஞர்களும் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டுக் கரை ஒதுங்கினர்.
[இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.](https://minnambalam.com/public/2021/10/26/19/muttal-falls-video-viral)
அந்த ஆபத்தான நேரத்தில் கூட தைரியமாகச் செயல்பட்ட இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், “ தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது. அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்கத் துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது!
பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்! “ என்று குறிப்பிட்டு இளைஞர்கள் தாயையும், குழந்தையையும் காப்பாற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
**-பிரியா**
�,