sகன்னியாகுமரியில் ஆய்வை தொடங்கிய முதல்வர்!

Published On:

| By Balaji

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டமே தீவு போல் காட்சி அளிக்கிறது. பிரதான அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆறுகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களையும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

அதுபோன்று, வைக்கநல்லூர், பரப்புவிளை, பருத்திக்கடவு, நெடும்புரம், மரப்பாலம் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்போல வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஆய்வு மேற்கொண்டது போல் இன்று (நவம்பர் 15) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

அதன்படி, முதல்வர் கன்னியாகுமரி செல்வதற்காக இன்று காலை 7.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் போலீசார் சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் சிறிது நேரம் காலதாமதமாகக் காலை 8.05 மணிக்குத்தான் வீட்டிலிருந்து கிளம்பினார்.

இதையடுத்து விமான நிலையம் சென்ற அவர், தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை சென்றார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் முதல்வரை வரவேற்றனர்.

பின்னர் கன்னியாகுமரி செல்லும் வழியில் கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் முதல்வரை வரவேற்பதற்காக நின்று கொண்டிருந்தனர். தனது வாகனத்தை நிறுத்தி பள்ளி மாணவிகளிடம் முதல்வர் பேசினார். அப்போது மாணவிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்சாகமாக படிப்பதாகவும், பள்ளிகளை திறக்க உத்தரவிட்டதற்கு நன்றியும் கூறினர்.

இதையடுத்து கன்னியாகுமரி சென்ற அவர், தோவாளை அருகே பெரியகுளம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து பேச்சி பாறை அணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share