கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மாணவி பொன் தாரணி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் தொடர் பாலியல் வன்முறையால் கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், மிதுன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாலியல் தொல்லையால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் தொல்லை குறித்து மாணவி பலமுறை பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தபோது, பேருந்தில் செல்லும்போது யாரோ ஒருவர் இடித்துவிட்டு சென்றதாக நினைத்துக் கொள். இதுகுறித்து வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றே கூறி வந்துள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கும் எந்த தகவலையும் தெரிவிக்கவும் விடவில்லை.
இதனால் ஆசிரியர் மிதுனுக்கு உடந்தையாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் ராமதாஸ், கமல், சீமான்,டிடிவி தினகரன்,கனிமொழி என அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதே கோரிக்கையை முன்னிறுத்தி மாணவியுடன் படித்த சக மாணவர்கள், உறவினர்கள் அனைவரும் கோவையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம், தனியார் பள்ளி முதல்வரைக் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாணவியின் வீட்டின் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு இடையே, மாணவியின் பெற்றோரைச் சந்தித்து கோவை மாநகரத் தெற்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெற்றோருக்கு உறுதி அளித்தார்.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லியும், அது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்காமல், ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது, மாநகர மகளிர் காவல்துறையினர் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது, தலைமறைவாக உள்ள பள்ளி முதல்வரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ட்விட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ”கோவை மாணவியின் மரணம் மனதை வருந்த செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும், வன்முமமும் ஒரு உயிரை பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**
�,”