அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 13) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம்), மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது . இதனிடையே, கேள்வி பதில் நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி எனவும்,வேண்டியதைச் சேர்த்த ஓவியர் எனவும் புகழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின், “நேற்று நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாக அறிவித்தது போல, அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகக் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையினை ஏற்று இனி வரும் காலங்களில் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். சமத்துவ நாள் உறுதி மொழி தமிழகம் முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும்.
அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று விசிக எம்.பி. திருமாவளவன் கோரிக்கை வைத்தார். அதனையும் ஏற்று முழு உருவச் சிலையும் உருவாக்கப்படும். பெரியாரின் நூல்களை 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதை போன்று அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துப் புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் திமுக எம்.பி.ஆ.ராசா . அதன்படி செம்பதிப்பாக அம்பேத்கரின் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மமக, மதிமுக, பாஜக, பாமக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வரவேற்றனர்.
**-பிரியா**