முதல்வருடன் சேலம் வந்த போட்டோகிராபருக்கு கொரோனா!

Published On:

| By Balaji

கடந்த ஜூன் 10ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சேலம் வந்தார். அவருடன் தலைமைச் செயலக புகைப்பட கலைஞர் மோகன் (வயது-30) என்பவரும் வந்துள்ளார்.

அன்று மாலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் அலுவலர்களுடன் அங்கிருந்து, தங்கும் விடுதிக்கும் சென்றுள்ளார். மறுநாள் காலை மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் உள்ளூர் செய்தியாளர்கள் ஐம்பதுக்கும் அதிகமானவர்களுடன் சேர்ந்து முதல்வரின் நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுத்துள்ளார்.

அடுத்த நாள், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சேலம் மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் மேட்டூர் செய்தியாளர்கள் பலருடன் மோகனும் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

இதையடுத்து, எடப்பாடியில் நடந்த மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு முதல்வர் சென்றுள்ளார். அவருடன், சென்ற முதல்வரின் பாதுகாப்புப் படை காவல்துறை அதிகாரிகளுடன் புகைப்பட கலைஞர் மோகனும் சென்றுள்ளார். எடப்பாடியில் நடந்த அரசு விழாவில் உள்ளூர் செய்தியாளர்கள் பலருடனும் மோகன் இணைந்து நின்று முதல்வரின் நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மோகன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புகைப்பட கலைஞர் மோகன் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சேலம் மாவட்ட செய்தியாளர்கள், மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், சேலம் மேட்டூர், எடப்பாடி பகுதி காவல்துறை அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம், ஏழு நாளுக்குத் தனிமையில் இருக்கவேண்டும். அதன் பிறகு, கொரானா பரிசோதனை செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியே வரவேண்டுமெனச் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் செல்போன் மூலம் தகவல் சொல்லி வருகிறார்கள்.

இதனால், முதல்வரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

**சிவசு**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share