Hமுதல்வரை நெருங்கிய கொரோனா!

Published On:

| By Balaji

முதல்வரின் செயலாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் கோட்டை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய சீனாவை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 58,327 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 888 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

தலைமைச் செயலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காக முதல்முறையாக இரண்டு நாட்கள் மூடப்பட்டது. தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வர் அலுவலகத்தில் தனிச் செயலாளராக பணியாற்றி வந்த தாமோதரன் கொரோனாவுக்கு உயிரிழந்தார். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸுக்கு சில நாட்களாக காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். முதல்வரின் இரண்டாம் நிலைச் செயலாளரான விஜயகுமார், காவல் உள்ளிட்ட முதல்வர் வசமுள்ள முக்கிய துறைகளின் பொறுப்புகளை கவனித்து வருகிறார். இதுபோலவே, முதல்வரின் உதவியாளர்களில் ஒருவரான கிரிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டார். இருவருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கோட்டை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்த விஷயம் முதல்வர் தரப்பை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

கொரோனா முதல்வருக்கு அருகிலேயே வந்துவிட்ட நிலையில், அவரை சந்திப்பதற்கான நடைமுறைகள், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. முதல்வருக்கு சுழற்சி முறையில் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பேட்ச் முடிந்து அடுத்த பேட்ச் வரும் காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் என்று வந்தால்தான் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதேபோல முதல்வர் நிகழ்வுகளில் பங்கேற்கும் அதிகாரிகள், காவல் துறையினர், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் என்று வந்தால்தான் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share