pஅம்மா மினி கிளினிக்குகளை திறந்த முதல்வர்

politics

மினி கிளினிக்குகள் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இந்த மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 630 மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 14) தொடங்கிவைத்தார். அமைச்சர் ஜெயக்குமாரின் ராயபுரம் தொகுதியிலுள்ள ஷேக் மேஸ்திரி தெருவில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி அவர் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது உரையாற்றிய முதல்வர், சுகாதாரத் துறையில் செய்துள்ள திட்டங்களை பட்டியலிட்டார். “தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது, அதற்காக தமிழ்நாடு அரசை பாராட்டுகின்றேன் என்று பிரதமர் பாராட்டுச் சான்றிதழ் கொடுத்தார். அதுமட்டுமல்ல, அவர்கள் காணொலிக் காட்சி மூலம் பேசுகின்றபோது, தமிழ்நாட்டைப் பின்பற்றி மற்ற மாநிலங்கள் செயல்பட வேண்டுமென்ற செய்தியையும் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு அரசு கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது, அந்த முயற்சி நல்ல பலனைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது” என சுட்டிக்காட்டினார்.

ஒரு புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 முதல்வரின் அம்மா மினி கிளினிக்குகள்” இன்றைக்கு துவங்கப்பட்டிருக்கின்றது என்ற முதல்வர்,

“அம்மா மினி கிளினிக்குகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அங்கேயே அவர்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை பெறக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றோம். இது வரலாற்றுச் சாதனையாகும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செயல்படுகின்ற அரசு என்பதை நாங்கள் இந்த நேரத்தில் நிரூபித்துக்காட்டிக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்.

ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மக்களுக்கு நோய் ஏற்படுகின்றபோது தனியார் மருத்துவமனைக்குச் சென்றால், 100 அல்லது 200 ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையிருக்கின்றது.அந்த சுமைகூட இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் அரசு, குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதியிலேயே அம்மா மினி கிளினிக்குகளை உருவாக்கி, அப்பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை எங்களுடைய அரசு தொடர்ந்து வழங்கும் என்று முதல்வர் உரையாற்றினார்.

மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பர். கிளினிக் காலை 8-12 மணி வரையும், மாலை 4-8 மணி வரை என 8 மணி நேரம் செயல்படும். கிளினிக்கில் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யலாம். சென்னையில் முதல்கட்டமாக 47 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன.

**எழில்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *