23 மீனவர்கள் கைது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Published On:

| By Balaji

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று பிரதமருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று கடிதம் எழுதினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் சிவகணேசன் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ற அவர்கள் கடந்த 13ஆம் தேதி இரவு, இலங்கை பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 23 பேரும், நேற்று காலை இலங்கை காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட 23 மீனவர்களுக்கும் வரும் 28ஆம் தேதி வரை காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்திக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த சூழலில் இவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்தியா, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்டகாலப் பிரச்சனையில் உடனடியாக பிரதமர் தலையிட்டு, நிரந்தரமாகத் தீர்த்திட, உறுதியான வழிமுறைகளைக் காண வேண்டும்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இலங்கை அதிகாரிகளிடம் உறுதியாக, தீர்க்கமான முறையில் இந்தப் பிரச்சனையை எடுத்துச் சென்றிட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வலியுறுத்த வேண்டும்.

மேலும், இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, பிரதமர், உரிய வழிமுறைகளைக் கையாண்டு, இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share