கொரோனா காலத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்திய உணவு கழகம் மூலமாக அரிசியை அனுப்பி வைத்தது. இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், “குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அரிசி அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாகப் புகார் எழுந்தது” என்று கூறினார்.
மத்திய அரசிடம் பெற்ற ரேஷன் அரிசியை முறைகேடாக விற்ற விவகாரத்தில் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்ட அப்பாவு, முகாந்திரம் உள்ளதால் முதல்வர் மற்றும் அமைச்சர் காமராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தினார்.
இதேபோல எல்இடி பல்புகள் வாங்கியதில் சுமார் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும், இதற்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்திய நாராயணா, ராஜமாணிக்கம் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத் துறை செயலாளர் அனுமதி பெற வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பொதுத் துறை செயலாளர் அமைச்சரவையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகச் செயல்பட மாட்டார்” என வாதிடப்பட்டது.
அத்துடன், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதலைப் பெற லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், 2018ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணை வரும் ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
**எழில்**�,