உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் , ரஷ்யா இடையேயான போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில், இந்திய வெளியுறவுத் துறை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியதன் அடிப்படையில், உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரை மீட்டு, பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு அழைத்து வர மாநில, மாவட்ட அளவில் மற்றும் டெல்லியில் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டன.
இந்த அவசரக் கட்டுப்பாட்டு மையங்களில் இதுவரை 3,025 தொலைப்பேசி அழைப்புகள், 4,390 மின்னஞ்சல்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில், தமிழ்நாட்டைச் சார்ந்த 2,223 மாணவர்கள் தொடர்பான விவரங்கள் தொகுக்கப்பட்டு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களை மீட்டு தாயகம் அழைத்துவர விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் அந்த மாணவர்களோடு உக்ரைன் நாட்டிலுள்ள மாகாணங்கள் வாரியாகத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதி செய்து வருவதோடு, அவர்களை விரைந்து மீட்டுக் கொண்டு வருவதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று (3-3-2022) காலை 6 மணி வரை தமிழ்நாட்டைச் சார்ந்த 193 மாணவர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களை உடனடியாக மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா ஆகிய நாடுகளில் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக சிறப்பு விமானங்கள் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தமிழக மாணவர்களை விரைந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, மேற்படி நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள இந்தியத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் 4 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும் இணைந்து சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**