பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் இன்று (டிசம்பர் 23) திமுக அதன் தோழமை கட்சிகள் நடத்தும் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதிலும், பேரணிக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பேரணியில் சுமார் 20, 000 மேற்பட்டோர் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசு சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் பேரரணாக விளங்கி வருகிறது. எக்காலத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. குடியுரிமை (திருத்த) சட்டத்தினால் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற போதிலும், சிலர் தொடர்ச்சியாக இஸ்லாமிய சகோதரர்களிடையே அவர்களது குடியுரிமை பாதிக்கப்படும் என்று வதந்திகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். இந்தப் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிஏஏ மீதான விவாதத்தில் இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தியதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இதே கோரிக்கையை வலியுறுத்தினேன் என்றும் கூறியுள்ள முதல்வர்,
“சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு தமிழ்நாட்டு மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தமிழக அரசு அக்கறையோடு தொடர்ந்து செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் தவறான பிரச்சாரங்களுக்குச் செவி சாய்க்காமல், அமைதி காக்க வேண்டும். அமைதிப் பூங்காவாகத் திகழும் நமது மாநிலத்தில், பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.�,