பத்தாயிரம் ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில் பூர்வஜென்ம தோஷத்தைக் கழிக்க 2012 -2013ஆம் ஆண்டில் 1006 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். அதுபோலவே தற்போதையை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, பூர்வ ஜென்ம தோஷத்தை கழிக்க 10,000 ஜோடிகளுக்கு பெருமாள், முருகன், சிவன் கோயில்களில் திருமணம் செய்துவைக்க ஜோதிடர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படிதான், சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் பத்தாயிரம் ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
கொரோனா பாதிப்புடன் தமிழக அரசு போராடி வரும் இந்த நிலையிலும், 10,000 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்வது குறித்து இந்து அறநிலையத் துறை ஆணையர் பனிகர் ரெட்டியிடம் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனையடுத்து, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில்களுக்கு கடிதம் சென்றிருக்கிறது. கோயில்களில் எத்தனை பேருக்கு வரை திருமணம் செய்யலாம், இடம் உள்ளிட்ட வசதிகள் எவ்வாறு உள்ளன என்று அதில் கேட்டிருக்கிறார் பனிகர். இதனையடுத்து, அனைத்து கோயில்களிலிருந்தும் முழு ரிப்போர்ட்களையும் அனுப்பி வருகிறார்கள்.
50 கோயில்களில் தலா 200 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும். 10,000 ஜோடிகளுக்கும் திருமணம் செய்துவைக்க ரூ. 4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வைகாசி மாதத்தில் உள்ள முகூர்த்த நாளில் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தாலி, புடவை, வேட்டி, சட்டை, பாத்திரங்கள் எடுக்க ஒரு ஜோடிக்கு 50 ஆயிரம் என ரூ.50 கோடி வரை இதற்காக செலவிடவும் இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திருமண ஜோடிகளைத் தேடும் படலத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள் அறநிலையைத் துறை அதிகாரிகளும் அமைச்சர்களும்.
**-வணங்காமுடி**�,