முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் நேற்று இரவு 11 மணியளவில் மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. தகவலறிந்து உடனடியாக சேலம் விரைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரில் வைக்கப்பட்டிருந்த தாயாரின் உடலைப் பார்த்து கண்கலங்கினார்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் உள்ளிட்டோர் தவசாயி அம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 8 மணியளவில் சிலுவம்பாளையம் வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட தவசாயியம்மாளின் உடல், அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தாயாரின் மறைவுக்கு ஆளுநர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
**ஆளுநர், பன்வாரிலால் புரோஹித்**
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் காலமான செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். தனது நிபந்தனையற்ற அன்பு மற்றும் தியாகங்களால் பிறப்பிலிருந்து சரியான முறையில் வளர்த்த தாயின் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆத்மா நித்திய அமைதியுடன் என்றென்றும் ஓய்வெடுக்கவும், எடப்பாடி பழனிசாமிக்கு பலம் கொடுக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
**தெலங்கானா ஆளுநர், தமிழிசை சவுந்தரராஜன்**
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
**துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம்**
பெற்றெடுத்து,பேணி வளர்த்து, சான்றோனாய் உயரச்செய்த அன்புத் தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை. தாயன்புக்கு நிகர் என்ன இருக்க முடியும்?
பாசமிகு தாயார் தவசாயி அம்மாளை பிரிந்து வாடும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினருக்கும் குடும்ப நண்பர்களுக்கும் எனது சார்பிலும், அதிமுகவின் சார்பிலும் அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மறைந்த தாயார் தவசாயி அம்மாளின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.தவசாயி அம்மாளின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறேன்.
**திமுக தலைவர், மு.க.ஸ்டாலின்**
“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் தனது 93-வது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவுக்கு திமுகவின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயார் மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
**திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி**
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அன்னையார் தவசாயி அம்மாள் தமது 93 ஆம் வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
**பாமக நிறுவனர், ராமதாஸ்**
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் சேலத்தில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது புதல்வர் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
**மதிமுக பொதுச் செயலாளர், வைகோ**
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் இயற்கை எய்திய செய்தி அறிந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு, மதிமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
**தேமுதிக தலைவர், விஜயகாந்த்**
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மேலும் அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தாயார் தவசாயி அம்மாளை இழந்து வாடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும், மற்றும் உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
**விசிக தலைவர், திருமாவளவன்**
தமிழக முதல்வரின் அருமை தாயார் தவசாயி அம்மாள்(93) காலமானதையறிந்து வேதனைப் படுகிறேன். மறைந்த அன்னைக்கு அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரை இழந்து துயருரும் முதல்வர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
**தமாகா தலைவர், வாசன்**
“தமிழக முதல்வருடைய கடின உழைப்புக்கும் படிப்படியான உயர்வுக்கும் சிறுவயதில் இருந்தே அவர்களை வளர்த்து ஆளாக்கிய பெரும் பங்கு அவர்களது தாயாரையே சாரும். அன்பு தாயாரை இழந்து வாடும் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அதிமுகவினருக்கும் தமாகா சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு முதல்வருக்கு ஆறுதல் கூறினார்.
இவ்வாறு முதல்வருக்கு தலைவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
**எழில்**
�,